Friday, May 10, 2024
No menu items!
Google search engine
Homeவாழ்வியல்தமிழகத்துக்கு வெப்ப அலை அலர்ட் - அடிப்படை தகவல் முதல் பாதுகாப்பு வழிமுறை வரை |...

தமிழகத்துக்கு வெப்ப அலை அலர்ட் – அடிப்படை தகவல் முதல் பாதுகாப்பு வழிமுறை வரை | Heat wave in Tamil Nadu! How can we protect ourselves?


ஏப்ரல் மாதமே வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மே மாதம் அக்னி நட்சித்திரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வரும் மே 1 முதல் 4-ம் தேதி வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. எனவே, வெப்ப நிலை அதிகரிப்பதால் அதன் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

வெப்ப அலை என்றால் என்ன? – ’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட ‘5 டிகிரி செல்சியஸ்’ வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

தமிழகத்தில் வெப்பத்தின் நிலை என்ன?: தமிழகத்தில் வெப்ப அலையானது மே 1 முதல் 4-ம் தேதி வரை வட தமிழகப் பகுதிகளில், குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் உச்சத்தை எட்டும். அதே நேரத்தில் தமிழகத்தின் உள்பகுதிகளில் மே 5 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது, வெப்ப அலைக்கு கீழுள்ள ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களுக்கு மே முதல் வார இறுதியில் தொடங்கி மே இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் தெரிவித்துள்ளார் .

அதேவேளையில், கடலோர மாநிலங்களான ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகள் உண்டாகும். தவிர, காற்றில் உள்ள ஈரப்பதம் அசௌகரியத்தை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்ப அலை எவ்வயதினரை அதிகம் பாதிக்கும்? – இந்த வெப்ப அலையால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் அதிகம் பாதிக்கபடுவார்கள். ஆகவே, இவர்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெயில் அதிகமுள்ள நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்கள்: கட்டுமான தொழிலாளர்கள் விவசாயத் தொழிலாளர்கள், காவலர்கள், தனியார் பாதுகாவலர்கள், நடைபாதை சிறுவியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், தொழிற்சாலை பணியாளர்கள், விற்பனையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் , குடிசைவாசிகள், யாசகர்கள், வீடற்றவர்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் முதலானோர் கடும் வெயிலில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நகரப்புறங்களில் வெப்பம் அதிகரிக்கக் காரணம் என்ன? – பொதுவாக, வெப்பத்தின் தாக்கம் கிராமங்களைவிட நகரப் பகுதிகளில் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம், நகரப் பகுதியில் பெருவாரியான மரங்கள் வெட்டப்பட்டு கான்கிரீட் பரப்பளவைக் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது, பசுமைப் பகுதிகளை அழிப்பது, காற்று மாசு இப்படியான பல காரணங்களுக்காக நகரப்பகுதிகளில் கிராமத்துடன் ஒப்பிடுகையில் வெப்பம் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கறது.

வெப்ப அலையின்போது நாம் செய்ய வேண்டியவை: தண்ணீர் தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். எலும்பிச்சை சாறு, பழச்சாறு, மோர், தர்பூசிணி பழம், முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர் தன்மை அதிகமுள்ள பழங்களைச் உட்கொள்ளலாம். அதேபோல், நார்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இது உடலில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க உதவும்.

அதேபோல், வெளியில் செல்லும்போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும். பருத்தியில் செய்த வெளிர் நிற ஆடைகளை அணியலாம். வெளியில் செல்லும்போது குடை, தொப்பி மற்றும் தலையைத் துப்பட்டாவைக் கொண்டு மூடி கொள்ள வேண்டும். இறுதியாக முடிந்த அளவு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டாலும் காற்றோட்டம் உள்ள அல்லது குளிர்ந்த இடங்களாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வெப்ப அலையின்போது செய்ய கூடாதவை என்ன? – வெப்ப அலையின் போது நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 வரை வெளியில் செல்லக் கூடாது. அதேபோல், நண்பகல் நேரத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சமையல் செய்யும் நேரத்தில் போதுமான காற்றோட்டம் இருக்கும் வகையில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். வெறும்காலுடன் வெளியில் செல்லக் கூடாது.

மதுபானம், தேநீர், காபி, அதிகமான அளவு கொண்ட சர்க்கரை கலந்த குளிர்பானம் இவற்றை எல்லாம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சமைத்த பழைய உணவுகளைச் சாப்பிட கூடாது. புரத சத்துக்கள் அதிகமா இருக்கும் உணவுகளைச் சாப்பிட கூடாது.அதிக நேரம் வெயிலில் நிறுத்தி வைத்திருக்கும் வண்டிகளில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ விடக்கூடாது. அங்கு வெப்ப அலை அதிகமாக இருக்கும். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.

கடுமையான வெப்ப அலைக்கு என்ன காரணம்? – குறைந்த மழை, காற்று மாசுபாடு, மரம் வெட்டுதல், நீர் நிலைகள் ஆக்கிரமைப்பு, புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் வெப்ப அலை ஏற்படுகிறது. இயற்கையை அதிக அளவில் மனிதர்கள் அழித்த காரணத்தால் காலநிலை மாற்றம் நம்மை சுட்டெரிக்கும் வெயிலாக, கடும் மழையாக, வெள்ளமாகப் பெரும் பாதிப்புகளைத் திருப்பி தருகிறது. ஆகவே வெப்ப அலையின் நிலையைக் குறைக்க மரம் வளர்ப்போம், இயற்கையைக் காப்போம் என நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments