Friday, May 10, 2024
No menu items!
Google search engine
Homeஆன்மிகம்40 லட்சம் பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர் கோயிலை வந்தடைந்தார்! | madurai kallalagar chithirai...

40 லட்சம் பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர் கோயிலை வந்தடைந்தார்! | madurai kallalagar chithirai thiruvizha festival event


மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு இன்று கோயிலை அடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். பின்னர் 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டி கழித்தனர்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ல் தொடங்கியது. மூன்றாம் நாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜபெருமாள், தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் நேரிக்கம்புடன் ஏப்.21-ல் அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்டார்.

ஏப்.22-ல் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. ஏப்.23-ல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சூடிய மாலையில் சாத்துப்படியாகி, ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் சித்ரா பவுர்ணமியன்று ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 6.02 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏப்.24-ல் வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோனம் அளித்தார்.

ஏப்.25 நள்ளிரவு முதல் ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. ராமராயர் மண்டபத்திலிருந்து திருமஞ்சனமாகி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் மண்டபகப்படிகளில் எழுந்தருளினார். ஆற்றின் தென்கரையில் திருமலைராயர் படித்துறை அருகிலுள்ள அண்ணாமலை தியேட்டர் மண்டகப்படியில் கள்ளழகரின் சடாரிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

ஏப்.26 அதிகாலையில் சேதுபதி மண்டபம் முன்பு 5 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மலைக்கு புறப்பட்டார். அன்றிரவு மூன்றுமாவடியில் மதுரை மாநகர மக்களிடமிருந்து விடைபெற்றார். அன்றிரவு சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் கள்ளழகர் உடல் களைப்பை போக்கும் வகையில் கோயில் பட்டர் கை கால்கள் பிடித்து விட்டார்.

பின்னர் இன்று காலையில் அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபம், கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி வழியாக காலை 11 மணியளவில் இரணியன் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருந்து கள்ளழகர் மீது மலர்கள் தூவி வரவேற்று தரிசனம் செய்தனர். கருப்பணசாமி கோயில் தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் நுழைந்தபோது 21 பெண்கள் பூசணிக்காயில் கற்பூர தீபமேற்றி திருஷ்டி கழித்தனர்.

பின்னர் 12.30 மணியளவில் கோயிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். அதனைத்தொடர்ந்து நாளை பத்தாம் நாளான ஏப்.28 உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. கள்ளழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கு திரும்பும் வகையில் 483 மண்டகப்படியில் எழுந்தருளி சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்து இருப்பிடம் சேர்ந்துள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments