Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்வறட்சி, மழை, காற்று, நோய் என பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகும் வெற்றிலை கொடிக்கால்கள் @ தருமபுரி...

வறட்சி, மழை, காற்று, நோய் என பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகும் வெற்றிலை கொடிக்கால்கள் @ தருமபுரி | Betel Leaf Stalks are Subject to Multi-Pronged Attacks like Drought, Rain, Wind and Disease @ Dharmapuri


தருமபுரி: வறட்சி, மழை, காற்று, நோய் என பலமுனை தாக்குதல்களால் தவிக்கும் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் சாகுபடி மானியம் வழங்க தருமபுரி மாவட்ட வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளோலை, ஜாலிக்கொட்டாய், நார்த்தம்பட்டி, அக்கமன அள்ளி, கோம்பை, மிட்டாரெட்டி அள்ளி, குட்டூர், ராஜாதோப்பு, பாளையம்புதூர், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் கடும் உழைப்பை பெறக் கூடிய தொழிலாக உள்ளது. அதிலும் வெற்றிலை சாகுபடி மேற்கொள்ள மிகக் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.

வறட்சி, மழை, காற்று, நோய் தாக்குதல் என பலமுனை தாக்குதல் நிலவுவதால் வெற்றிலை விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். இது குறித்து, வெள்ளோலை அடுத்த ஜாலிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் உள்ளிட்ட வெற்றிலை விவசாயிகள் கூறியது: இதர பயிர் சாகுபடியில் நடவு செய்த சில வாரங்கள் வரை மிக அக்கறையுடன் பராமரித்து, பின்னர் பராமரிப்பை குறைத்துக் கொள்ள முடியும். ஆனால், வெற்றிலை சாகுபடி என்பது அனைத்து நிலைகளிலுமே பச்சிளங் குழந்தையை வளர்ப்பது போன்ற பணி தேவைப்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்கால்கள் ஆரோக்கியமாக இருக்க வயலில் எப்போதும் மிதமான ஈரத்தை பராமரிக்க வேண்டும். அண்மையில் நிலவிய வறட்சியால் பல இடங்களில் கொடிக்கால்கள் கருகிவிட்டன. தற்போது மழை தொடங்கிவிட்ட நிலையில், மழையின் போது வீசும் பலத்த காற்றில் கொடிக்கால்கள் சரிந்து விழுந்து விடுகின்றன. அதை சீரமைக்க பெரும் பொருட்செலவில் கடுமையான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தொடர் மழை பெய்தாலும் வெற்றிலைச் செடிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இவை தவிர, இலையின் பின் பகுதி பழுப்பு நிறமாக மாறும் வகையிலான வைரஸ் பாதிப்பு, கருந்தாள் பாதிப்பு, செம்பேன் பாதிப்பு என நோய்த் தாக்குதல்களும் வெற்றிலை விவசாயிகளை வேதனையில் தள்ளுகிறது. விலையும் ஏற்ற, இறக்கம் நிறைந்ததாக உள்ளது.

சுப காரியங்கள், திருவிழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது. சித்த மருத்துவத்திலும் வெற்றிலை இடம்பெறுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலையை பயிரிடும் விவசாயிகள் பலமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிரை நாடிச் சென்று விடுகின்றனர்.

எனவே, வெற்றிலை கொடிக்கால்கள் வறட்சி, மழை, காற்று, நோய் போன்றவற்றால் பாதிப்படையும்போது அரசு சார்பில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையெனில், புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறையில் இருப்பது போன்று வெற்றிலை சாகுபடிக்கு ஆண்டு தோறும் ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் சாகுபடி மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments