Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவாழ்வியல்வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர் கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் @ தஞ்சாவூர் | Chola...

வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர் கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் @ தஞ்சாவூர் | Chola Era Nandi and Vishnu Stone Sculptures Buried on Fields @ Thanjavur


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர்கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்களும், பல்லவர் கால கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்திரக்குடியைச் சேர்ந்த பேராசிரியை சத்தியா என்பவரின் வயலில் நந்தி ஒன்று பாதிபுதைந்த நிலையில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான தில்லை.கோவிந்த ராஜன், ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்து கற்சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் கண்டறிந்தனர்.

இது குறித்து மணி.மாறன் கூறியதாவது: சித்திரக்குடி, கச்சமங்கலம், மாரனேரி, வெண்டயம்பட்டி போன்ற ஊர்களில் பல்லவர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி.7-ம் நூற்றாண்டில் பல்லவர்களுக்கு உட்பட்ட முத்தரையர் ஆட்சி செந்தலை எனும் ஊரைத் தலைமையிடமாக கொண்டு நடந்துள்ளது. பிறகு சோழர்கள் ஆட்சிக் காலத்தில் சித்திரக்குடி, லிங்கத்தடி மேடு என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வயல்வெளியில் பாதி பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி உள்ளது.

இந்த நந்தியானது கி.பி 9- 10-ம் நூற்றாண்டின் சோழர் காலத்தை சேர்ந்ததாக உள்ளது. இந்த நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப் பெற்றுள்ளது. மேலும், ஆனந்த காவேரி வாய்க்காலின் உட்புற தென்கரையை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில் சுமார் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டது. இப்பகுதியில் பெரிய சிவன் கோயில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக்கூடும்.

பிற்காலத்தில் அந்தப் பகுதியில் புதியதாக கோயில் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், கி.பி 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் அடி பீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் முதன்முதலாக இவை கண்டறிய பெற்றுள்ளது சிறப்பாகும்.

இக்கோயில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. சித்திரக்குடி, சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கியப் பகுதியாக இருந்துள்ளதாக தெரிகிறது என்றார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments