Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeஇலக்கியம்மேடையிலும் தாக்கம் செலுத்திய கதைகள் | an evening with imaiyam stories

மேடையிலும் தாக்கம் செலுத்திய கதைகள் | an evening with imaiyam stories


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் இமையம் எழுதிய 4 சிறுகதைகளை வைத்து ‘இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நாடக நிகழ்ச்சி ஏப்.27-ல் அரங்கேற்றப்பட்டது. ப்ரஸன்னா ராமஸ்வாமி நாடகமாக இயக்கித் தயாரித்திருந்தார்.

தனித்து வாழும், நடுத்தர வயதுப் பெண் சந்தோஷம், தவறான நோக்கத்துடன் தன்னைப்பின்தொடரும் இளைஞனிடம் தன் துயரம் மிகுந்த வாழ்க்கையையும் இந்தச் சமூகத்தின் பாலினப் பாகுபாடுகள் மீதான கோபத்தையும் கொட்டித் தீர்ப்பதுதான் ‘அணையும் நெருப்பு’கதை. கிட்டத்தட்ட ஓரங்க நாடகம்போன்ற இந்தக் கதையின் கனத்தைத் தன்அபாரமான நடிப்பால் தோள்களில் சுமந்துநிற்கிறார் கீதா கைலாசம். பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் சிந்தும் அளவுக்கு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்திய விதத்தில் வியக்க வைக்கிறார். சந்தோஷத்தைப் பின்தொடரும் இளைஞராக ரோஷன், முக பாவனைகளால் கவனம் ஈர்க்கிறார்.

‘ஐயா’ கதையில் ஆட்சியர் அலுவலகத்தின் அலுவலக உதவியாளர் (பியூன்), தனது பணிச்சூழல் குறித்து மனைவியிடம் புலம்புகிறார். கடைநிலை ஊழியரின் மனக் குமுறலை மையப்படுத்திய இந்தக் கதையில் அலுவலக உதவியாளராக சுகுமாரும் அவர்மனைவியாக நிகிலா கேசவனும் குறை சொல்ல முடியாத வகையில் நடித்துள்ளனர்.

திருவிழாவில் திருடப் போகும் திருடன், குலசாமியான ஆகாச வீரனுக்குப் படையல் போட்டு அனுமதி கேட்கும் கதை ‘ஆகாசத்தின் உத்தரவு’. இதில் வரும் திருடன், எளிய மனிதர்களுக்கே உரிய துணிச்சலுடன் சாமியை ஏசுகிறான், பகடி செய்கிறான். சாமியின் அனுமதி கிடைத்ததும் சாமியைச் செல்லம் கொஞ்சுகிறான். இதில் திருடனாக நடித்துள்ள திவாகர்ரவி, கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

‘தாலி மேல சத்தியம்’ கதையில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்து விட்ட வேட்பாளர் ஒருவர்,வீட்டில் இருக்கும் பெண்ணிடம் வாக்குக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டு அடாவடி செய்கிறார். இந்தக்கதையின் வழியே ஊரகப் பகுதிகளில் நிகழும் தேர்தல்களில் சாதி பல பரிணாமங்களில் தாக்கம் செலுத்துவதைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் இமையம். இதில் தோற்றுப் போன வேட்பாளரின் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிரசன்னா ராம்குமார். அவரிடம் மாட்டிக்கொள்ளும் பெண்ணாக நிகிலா கேசவனின் வசன உச்சரிப்பு தொடக்கத்தில் சற்று அந்நியமாகத் தோன்றினாலும் கதைக்குள் போகப் போக தனது நடிப்பால் அக்குறையை மறக்க வைக்கிறார்.நாடகத்தின் இடையே கதைப் பகுதிகளைவாசிப்பவராக ஜானகி சுரேஷும், ஒலியமைப்பாளர் பிரேம்குமாரும் தமது பங்களிப்பை நிறைவாகத் தந்துள்ளனர்.

சமகால சமூகத்தின் வெவ்வேறு கூறுகளைத் துல்லியமாகப் பிரதிபலித்து வாசகரை ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்துபவை இமையத்தின் கதைகள். இமையத்தின் எழுத்து வாசகரிடம் செலுத்தும் தாக்கத்தை, நாடகத்தைப் பார்த்த பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்துவதில் ப்ரஸன்னா ராமஸ்வாமிதலைமையிலான நாடகக் குழு வெற்றி பெற்றிருக்கிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments