Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeஇலக்கியம்‘இந்து தமிழ் திசை’, வர்த்தமானன் பதிப்பகம், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வாசிப்புத் திருவிழா...

‘இந்து தமிழ் திசை’, வர்த்தமானன் பதிப்பகம், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வாசிப்புத் திருவிழா | புத்தக வாசிப்பு மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள முடியும்: வெ.இறையன்பு கருத்து | reading festival by hindu tamil thisai


சென்னை: புத்தக வாசிப்பு மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள முடியும் என்று முன்னாள் தலைமைச் செயலரும், எழுத்தாளருமான வெ.இறையன்பு கூறினார்.

வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘வாசிப்புத் திருவிழா’ என்ற நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்துள்ளது. வாசகர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவை நகரங்களில் நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழா, சென்னை பேட்ரிஷியன் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை வர்த்தமானன் பதிப்பகம் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வழங்கின.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: தமிழ் இதழியல் வரலாற்றில் ‘இந்து தமிழ் திசை’க்கு தனி இடமுண்டு. கடந்த 10 ஆண்டுகளில், 5 ஆயிரத்துக்கும் மேலான புத்தக விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள் என சிறந்த சேவையை ‘இந்துதமிழ் திசை’ செய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இளம் தலைமுறையினரிடம் வாசிப்பைக் கொண்டுசெல்லும் வகையில் இத்தகைய முயற்சியை முன்னெடுத்தமைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது வாசிப்பு குறைந்து வருவதாகப் பலரும் கூறுகின்றனர். உண்மையில் வாசகர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. புத்தகக் காட்சிகளில் மக்கள் கூட்டத்தையும், பலர் ஆர்வமுடன் நூல்கள் வாங்கிச் செல்வதையும் காணமுடிகிறது. பெண்களிடமும் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், புத்தக வாசிப்புக்கும், அதை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான செயல்பாடுகளுக்குமிடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் வாசிப்பின் பலன் வாசகர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசியதாவது: ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் வாசிப்புத் திருவிழா இன்றைய காலத்தின் தேவையாகும். சமூகத்தின் பல்வேறு தளங்களில் மனிதர்கள் மேன்மையுற வேண்டும் என்ற ஒப்பற்றச் சிந்தனையுடன், வாசகர் திருவிழா நடக்கிறது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அதிக புத்தகங்கள் இருக்காது. கிடைத்த ஒரு நூலையே பலமுறை படிப்போம். ஆனால் இன்று புத்தகங்கள் அதிகரித்துவிட்டன. பொருளாதார வசதிகளும் மேம்பட்டுள்ளன. எனவே, நூல் வாசிப்பை வாழ்வின் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல, போட்டித் தேர்வில் வெற்றிபெற செய்தித்தாள் வாசிப்புஅவசியமாகும். புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும், புத்தகங்கள் படிப்பது மன அழுத்தம் குறைய உதவும். பேசுவதில் தொடங்கி, வாழ்க்கை முறையை நெறிப்படுத்தி, நேர்மையாக வாழ வழிசெய்யும்.

இன்றைய தலைமுறைக்கு பெரும் சவால் கவனச் சிதறல்கள்தான். ஐந்து நிமிடம்கூட செல்போன் பார்க்க முடியாமல் பலரால்இருக்க முடியாது. அதற்கு பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன்இருப்பதே காரணம். அவர்கள் ஏதேனும் ஒரு வழியில் ஆறுதலைப்பெற விரும்புகின்றனர். ஆனால்,நமக்கான ஆறுதல் நூல்களில் மட்டுமே முழுமையாகக் கிடைக்கும். வாசிப்பை எளிமையாகத் தொடங்குகள். அனைத்துத் துறைகளிலும் சிறந்த நூல்களை தேடித் தேடி வாசிக்க வேண்டும்.

வரலாற்றுப் புதினங்கள், நாவல்கள், வாழ்க்கை வரலாறு, சுய சரிதைக் குறிப்பு, அறிவியல் புதினங்கள், அறிவியல் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம் என பல்தரப்பட்ட நூல்களையும் படிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் எஸ்.வர்த்தமானன் பேசும்போது, ‘‘இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செல்போன் தாக்கத்தால் வாசிப்பு முழுமையாக அழியும் நிலை உள்ளது. இந்நிலைமாற வேண்டும்.

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் புத்தகவாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கல்லூரி ஆசிரியர்கள் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி, பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்’’ என்றார்.

விழாவில், ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார். முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமிநிறுவனர் பூமிநாதன், பேட்ரிஷியன் கல்லூரி இயக்குநர் ஸ்டேனிஸ்லாஸ், முதல்வர் ஆரோக்கிய மேரி கீதா தாஸ், ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments