Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeஇலக்கியம்கவனம் ஈர்க்கும் புதிய சிறுகதை நூல்கள் | storys

கவனம் ஈர்க்கும் புதிய சிறுகதை நூல்கள் | storys


பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ வெளியாகி நூற்றாண்டு கடந்துவிட்டது. இன்று தமிழ்ச் சிறுகதை பரந்துபட்டு பல்வேறு பண்பாட்டையும் மக்களையும் கொண்டதாக விரிவுகொண்டுள்ளது. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கந்தர்வன், ஆதவன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், பூமணி, ராஜேந்திர சோழன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் எனத் தமிழ்ச் சிறுகதையை வளமாக்கியவர்கள் பலர். இன்று தமிழ்ச் சிறுகதைகள் உலகமயமாக்கலுக்கும் தொலைத்தொடர்பியல் புரட்சிக்கும் பிந்தைய காலகட்டத்தில் இருக்கின்றன. இந்தப் புதிய பின்னணியில் இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டிப் பல புதிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

இந்த நவீன மாற்றங்களை உள்வாங்கித் தன் கதைகள்வழித் தொடர்ந்து வெளிப்படுத்திவருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்; தமிழ்ச் சிறுகதை எழுத்துகளில் பெரும் பாதிப்பை விளைவித்தவரும்கூட. அவரது ‘கிதார் இசைக்கும் துறவி’ தொகுப்பு (தேசாந்திரி பதிப்பகம்) இந்த ஆண்டு புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பு மேற்சொன்ன அம்சத்துக்கான ஒரு பதமாக வெளிவந்துள்ளது. வெள்ளப் பாதிப்பை பார்வையிட வரும் மத்தியக் குழு, செக்காவின் கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியம் அளிக்கும் பல கருக்களில் இந்தக் கதைகள் அமைந்துள்ளன.

‘நாட்டுப் பூக்கள்’ தொகுப்பின் வழி கவனம்பெற்ற மு.சுயம்புலிங்கத்தின் புதிய சிறுகதைத் தொகுப்பு ‘காடு விளையாத வருஷம்’ (மணல் வீடு பதிப்பகம்) வெளியாகியுள்ளது. கரிசல் வட்டார வாழ்க்கையைச் சித்தரிக்கும் குறுங்கதைகள் இவை. எளிமையும் செளந்தர்யமும் கொண்ட கதைகள் இவை. சர்வதேசப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் என்கிற சிறப்புப் பெயர் பெற்றவர் பெருமாள்முருகன். அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு ‘வேல்’ (காலச்சுவடு). வாட்ஸ்-அப் போன்ற நவீன மாற்றத்தைத் தன் கதைகளில் வெளிப்படுத்தக்கூடியவர்களில் ஒருவர் பெருமாள்முருகன். அவரது இந்தக் கதைகள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறித் தனிக் குடும்பங்களாக மாறிவிட்ட ஒரு தலைமுறையின் வளர்ப்புப் பிராணி மோகத்தின் விளைவுகளைச் சொல்கின்றன. குடும்ப உறவுகளில் அது செய்யும் பாதிப்பை நகைச்சுவையும் தீவிரமும் கலந்து இந்தக் கதைகள் சொல்கின்றன.

நாவலாசிரியராகக் கவனம் பெற்ற ‘சு.தமிழ்ச்செல்வியின் சிறுகதைகள்’ தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. தமிழ்ச்செல்வியின் நாவலைப் போல் இந்தச் சிறுகதைகளும் பெண்களின் பிரத்யேகமான உலகத்துக்குள் சஞ்சரிப்பவை. இந்தத் தொகுப்பில் படிமமாகவும் கதைகளை அவர் எழுதிப் பார்த்துள்ளார். ஈழ எழுத்தாளர்களில் செறிவான மொழிநடை கொண்ட ஒருவர் தமிழ்நதி. இவரது கதைத் தொகுப்பு ‘தங்க மயில்வாகனம்’ (தமிழினி) வெளிவந்துள்ளது.

சிறுகதை மொழியின் செழுமைக்காகப் பாரட்டப்பெற்ற பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்’ (யாவரும் பதிப்பகம்) சிறுகதைத் தொகுப்பு இந்தப் புத்தகக் காட்சியில் வெளியாகியுள்ளது. நவீன வாழ்க்கையின் குழப்பங்களைத் தன் கதைகளில் வெளிப்படுத்திவரும் கார்த்திகைப் பாண்டியனின் ‘ஒரு சாகசக்காரனின் கதை’யும் (எதிர் வெளியீடு) ‘மைத்ரி’ நாவல் வழி கவனம்பெற்ற அஜிதனின் ‘மருபூமி’ (விஷ்ணுபுரம் பதிப்பகம்) தொகுப்பும் வெளியாகியுள்ளன. ‘உள்நாக்குகளின் மாநாட்டில் பதினான்கு தீர்மானங்கள்’ போன்ற வித்தியாசமான கதையைக் கொடுத்த த.அரவிந்தனின் ‘உசேன் போல்டின் கால்கள்’ தொகுப்பும் (வம்சி வெளியீடு) வெளியாகியுள்ளது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments