Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeவாழ்வியல்கோடை கால உஷ்ணம், நீரிழப்பை தடுக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர்...

கோடை கால உஷ்ணம், நீரிழப்பை தடுக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் விளக்கம் | traditional medicines to tackle heat problems


சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் தொடங்கியுள்ளதால், இந்த மாதம் முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்ப அலையின் தாக்குதல் மற்றும் அதன் விளைவுகளில் இருந்தும், குறிப்பாக முதியோர், குழந்தைகளை எளிய பாரம்பரிய மருத்துவ முறையில் பாதுகாப்பது எப்படி என்று சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் (மருத்துவமனை) இயக்குநர் சித்த மருத்துவர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:

கோடைகாலத்தில் உடலின் அதிகப்படியான உஷ்ணத்தை குறைப்பது, உடலில் ஏற்படும் நீரிழப்பை சரிசெய்வது ஆகிய 2 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் இந்த 2 காரணங்களால்தான் உடலின் நுண்சத்துகளும், நீர்சத்துக்களும் குறைகின்றன. அதனால், நம்மை பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் அனைவரின் வீட்டிலும் எளிய முறையில் கிடைப்பது சுக்கு. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை – சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பர். நாம் செய்ய வேண்டியது சுக்குடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து தேநீர் வடிவில் அருந்தலாம். அகத்தில் உள்ள அக்கினியை சீர்செய்யும் சீரகத்தை தேநீர் செய்து பருகலாம். இதன்மூலம் உடலின் உஷ்ணம் குறைவதோடு, வயிறுமந்தம் நீங்கி, உடல் பலப்படுத்துகிறது.

புதினா, கொத்துமல்லி போன்றவற்றையும் தனித்தனியே முறையாக தேநீர் செய்து பருகினால், உடல் வெப்பம் தணிவதோடு சிறந்த நோய்த்தடுப்பு காரணியாகவும் செயல்படும். கோடைகாலத்தில் உண்டாகும் மந்தத்தை போக்கி பசியை தூண்டும்.

பன்னீர் ரோஜா, செம்பருத்தி இதழ்: சர்பத் வடிவில் பருக நினைபவர்கள், பன்னீர் ரோஜா இதழ் 100 கிராமினை, பாத்திரத்திலிட்டு 250 மிலி நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, பனைவெல்லம், சப்ஜா விதை சேர்த்து பருகினால், உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, செரிமானத்தை சீர்செய்து, அடிவயிற்றில் ஏற்படும் வலியையும், பிடிப்பையும் குறைக்கும். நன்னாரி, வெட்டிவேர், செம்பருத்தி இதழ் முதலியவற்றையும் தனித்தனியே சர்பத் செய்து அருந்தலாம். இயற்கை தந்த கொடைகளில் இளநீரும், கற்றாழையும் கோடைக்கால பாதிப்பான உடல் உஷ்ணம், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவற்றில் விட்டமின்களும், தாது உப்புக்களும் உடலுக்கு தேவையான அளவில் இருப்பதால் உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, மனதுக்கு உற்சாகத்தை தருகிறது.

இளநீர், நுங்கு, கற்றாழை: கோடையின் வெப்பத்தை தாங்கி நிற்கும் பனையிலிருந்து கிடைக்கும் நுங்குடன், பொடாசியம் சத்து நிறைந்த இளநீரை சேர்த்து பருக உடலின் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். கற்றாழையின் மேற்தோலை நீக்கி, உள்ளிருக்கும் சோற்றுப் பகுதியை குழகுழப்பு நீங்கும் வரை சுத்தமான நீரில் அலசிய பின் அரைத்து சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, தேன், தேவையான அளவு நீர் சேர்த்து அருந்தலாம்.

முதுமையை தடுத்து என்றும் இளமையோடு இருக்கச் செய்யும், அதியமானுக்கு அவ்வை கொடுத்த அமிர்தத்துக்கு ஒப்பான நெல்லிக்கனியின் விதையினை நீக்கி சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து, அதனுடன் தேவையான அளவு தேன், உப்பு, நீர் சேர்த்து அருந்தினால், உடலின் அடிப்படை தத்துவமான உயிர் தாதுக்களை (வாதம், பித்தம், கபம்) சமநிலையில் வைத்திருப்பதோடு கோடைகாலத்தில் உடலில் மிகுதியாகும் வெப்பத்தை தன்னிலைப்படுத்தி புத்துணர்ச்சி தரும்.

ஆர்.மீனாகுமாரி

ஊறல் நீர்: வெப்ப காலத்தில் வீசும் அதிகப்படியான வெப்ப அலைகளின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க, மண்பானையில் நீருடன் வெட்டிவேர் சேர்த்து ஊறல் நீராக அருந்தலாம். இதேபோன்று நெல்லிக்கனி, தேற்றான்விதை, சீரகம் இவற்றையும் தனித்தனியே ஊறல்நீர் செய்து அருந்தலாம். கோடைகாலத்தில் பூக்கும் தன்மை உடைய வேம்பின் மலர்களை நீர்விட்டு ஊறவைத்து ஊறல்நீராக பருக உடலின் சூட்டை தணிப்பதோடு, தாகத்தை தணித்து நாவறட்சியை போக்கும். வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து உண்ணும்போது, கோடைகாலத்தில் பரவும் அம்மை போன்ற வைரஸ் தொற்று நோய்கள் வராமல் நம்மை பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

வெந்தய நீர்: இரவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அதிகாலை வெந்தயம் ஊறிய நீருடன் வெந்தயத்தையும் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தலாம். பதிமுகம் மற்றும் செம்மரம் இவற்றின் பட்டைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து, இளஞ்சிவப்பு நிறமானதும் வடிகட்டி ஆறவைத்து அருந்தினால், கிருமிகளால் உண்டாகக் கூடிய சிறுநீர் உபாதைகளை தடுக்கலாம். தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு பொலிவை தரும். அதேபோல், பானகம், பழையசோறு, கஞ்சிகள், கூழ், கீரைகள், பழங்கள், நீர்மோர், காய்கறிகள் ஆகிய நீர் பானங்கள் மற்றும் உணவுகளை கடைபிடித்து சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments