Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeதொழில்நுட்பம்இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் - ஏஐ வீடியோ வெளியீடு | Buddhadeb Bhattacharjee...

இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – ஏஐ வீடியோ வெளியீடு | Buddhadeb Bhattacharjee AI Video seek support for Left candidates cpi Marxist


கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வீடியோ ஒன்றை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதுவும் சாத்தியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அந்த வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் டீப் ஃபேக் வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு இந்திய தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இந்தச் சூழலில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வீடியோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவாக்கி உள்ளது.

சுமார் 2 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் வங்க மொழியில் அவர் பேசுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. ‘தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாட்டையும், மாநிலத்தையும் காக்க தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா அழைக்கிறார்’ என இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

இந்த வீடியோவில் மேற்கு வங்க மாநிலத்தில் விவாதத்தை எழுப்பியுள்ள சந்தேஷ்காலி விவகாரம், ஊழல் போன்ற காரணங்களால் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மன்னிக்க முடியாது என்றும், பாஜகவின் வகுப்புவாத செயல் மற்றும் தேர்தல் பத்திர முறைகேடு குறித்தும் அவர் விமர்சிப்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தை காக்க திரிணமூல் காங்கிரஸையும், தேசத்தை காக்க பாஜகவையும் வீழ்த்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 2016-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புத்ததேவ் பங்கேற்றார். அதன் பிறகு உடல்நிலை காரணமாக அவர் பொதுவெளியில் வருவதை தவிர்த்து கொண்டார். கடந்த 2021 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின்போது அவரது ஆடியோ பதிப்பு வெளியிடப்பட்டது.

1977 முதல் 2011 வரையில் சுமார் 34 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியில் இருந்தது. 2000 முதல் 2011 வரையில் புத்ததேவ், முதல்வராக பதவியில் இருந்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் புதுமுகங்களை களம் இறக்கியுள்ளது மார்க்சிஸ்ட். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர் மற்றும் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள். தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது மார்க்சிஸ்ட். மொத்தம் 23 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments