Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeசுற்றுலாகொடைக்கானலில் மலை கிராம சுற்றுலாவை ஊக்குவிக்குமா தமிழக அரசு? | Will the Tamil Nadu...

கொடைக்கானலில் மலை கிராம சுற்றுலாவை ஊக்குவிக்குமா தமிழக அரசு? | Will the Tamil Nadu Govt Promote Hill Village Tourism on Kodaikanal?


திண்டுக்கல்: கொடைக்கானலில் மலைகிராம சுற்றுலாவை ஊக்குவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலைகிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி கொடைக்கானல். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, வாகனங்கள் அதிகரிப் பால் திணறி வருகிறது.

சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள்: கொடைக்கானல் மலைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. பைன் பாரஸ்ட் பகுதியில் மரங்களுக்கு இடையே மரத்தால் தொங்கு பாலம் அமைத்து சுற்றுலா பயணிகள் நடந்து செல்வது, ( ட்ரீ வாக் ), நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஜிம்கானா மைதானம் வரை ஏரியின் மேல் செல்லும் வகையில் ரோப்கார் அமைப்பது, டால்பின்நோஸ் பகுதியில் மலையை ஒட்டி கண்ணாடி பாலம் ( ஸ்கை வாக் ) அமைத்து, அதில் சுற்றுலா பயணிகள் நடப்பது என பல திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் செயல்படுத்தப்படாமல் உள்ளன.

அரசிடம் நிதியை எதிர்பார்க்க முடியாத நிலையில், அரசுக்கு செலவேயின்றி மலைகிராம சுற்றுலாவை மேம்படுத்த, சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத்துறை களம் இறங்கி அதற்கான வாய்ப்புகளை கண்டறிந்தது. ஆனால், செலவின்றி நிறைவேற்றப்பட வேண்டிய மலை கிராம சுற்றுலாத் திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நகருக்குள் இருக்கும் பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், ஏரியில் படகு சவாரி மற்றும் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை மட்டுமே பார்த்து விட்டு செல்கின்றனர்.

இவற்றையும் கடந்து மலைகிராமப் பகுதிகளில் இயற்கை எழில்மிக்க ரம்மி யமான பகுதிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மலை கிராம சுற்றுலா குறித்து சுற்றுலாத் துறை ஆய்வு நடத்தி பல இடங்களை கண்டறிந்தது. இருந்தபோதும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கூன் பாண்டிய மன்னர் கட்டிய கோயில்: ஆங்கிலேயர்தான் கொடைக்கானலை கண்டுபிடித்தார்கள் என்பதற்கு மாறாக, அதற்கு முன்பே மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் வில்பட்டி மலை கிராமத்தில் கோயில் கட்டியுள்ளனர். கூன்பாண்டிய மன்னன் கட்டிய வெற்றி வேலப்பர் கோயில் இங்கு உள்ளது. பழங்காலத்து கோயில் என்பதால், சுற்றுலா பயணிகள் பலரும் இந்தக் கோயிலை காண வருவர். வில்பட்டி கிராமத்துக்கு அருகேயுள்ள புலியூர் பகுதியில் பசுமை புல்வெளி பகுதிகள் அதிகம்.

மழைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள புற்கள் மழைநீரை சேமித்து வைத்து சிறுக சிறுக வெளியிடுவதால், நீர் ஒன்றி ணைந்து ஓடையாக, அருவியாக, ஆறாக உருவெடுத்து ஆண்டுதோறும் மலைப் பகுதியில் தண்ணீரை தருகிறது. மழை நீரை சேகரிக்க இந்த இயற் கையிடம் சுற்றுலா பயணிகள் கற்றுக் கொள்ளலாம்.

பள்ளங்கி கிராமத்தில் ‘ரிவர் வாக்’: கொடைக்கானலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பள்ளங்கி மலைகிராமம். இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். இந்த மலைகிராமத்தில் சமவெளியில் நீண்ட தூரம் சிற்றோடை ஒன்று செல்கிறது. இதில் செல்லும் குளிர்ந்த நீரில் காலை தண்ணீரில் நனைத்தபடி நடந்து செல்வது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கும். இது ‘ரிவர் வாக்’ என அழைக்கப்படுகிறது. இதை ஒருசிலர் மட்டுமே அனுபவிக்கின்றனர்.

பள்ளங்கி – கோம்பை இடையே பள்ளங்கி அருவியையும் கண்டு ரசிக்கலாம். புல்வெளி பகுதிகளும் அதிகம். இதை ‘சூட்டிங் ஸ்பாட்’ என அழைக்கின்றனர். இங்கு பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. இங்கிருந்து 360 டிகிரி கோணத்தில் மலையின் அழகை ரசிக்கலாம். கோம்பை பகுதிக்கு சென்றால் பழங்குடியின மக்களை காணலாம். மலைத் தோட்டங்களில் விளைவிக்கப்படும் கேரட், உருளை, காபி, மிளகு ஆகியவற்றையும் நேரில் கண்டுவரலாம்.

ஆதிமனிதன் கற்திட்டை: கொடைக்கானல் செல்லும் வழியில் பெருமாள்மலை அருகேயுள்ளது பேத்துப்பாறை மலைகிராமம். இங்கு ஆதிமனிதன் வாழ்ந்த கற்திட்டை உள்ளது. தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் இது அவசியம் பார்க்க வேண்டிய பகுதி. சுற்றுலா பயணிகள் பலரையும் இந்த இடம் சென்றடையவில்லை. பேத்துப் பாறை மலைகிராமம் அருகே அஞ்சுவீடு அருவி, ஓராவி அருவி ஆகிய அருவிகள் உள்ளன. ஆண்டு தோறும் தண்ணீர் கொட்டும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

இதேபோல் மேல்மலைப் பகுதியில் பூம்பாறை, கவுஞ்சி, மன்னவனூர், போளூர் மலைகிராமங்களில் இதுவரை கண்டுரசிக்காத பல இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சுற்றுலாத் துறை உதவ வேண்டும். விடுதிகளில் தங்கி சுற்றுலா பயணிகள் அதிக தொகை செலவழிக் கின்றனர். அதற்கு மாற்றாக மலை கிராமப்புறங்களில் ‘ஹோம் ஸ்டே’ போல் அடிப்படை வசதிகள் கொண்டு வீடுகளை சுற்றுலாத் துறையே அங்கீகரித்து சுற்றுலா பயணிகளை தங்கச் செய்யலாம். இதன்மூலம் மலைகிராம மக்களின் பொருளாதாரமும் அதிகரிக்கும்.

மலைகிராம சுற்றுலா மூலம் பல இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வர் என்பதால் ஒரே இடத்தில் குவிவது, வாகன நெரிசல் உள்ளிட்டவை குறையும். எந்த நிதியும் அரசு செலவழிக்காமல், மலைகிராம சுற்றுலா இடங்கள் குறித்து தெளிவுபடுத்தவும், ஹோம் ஸ்டே முறைக்கு விதிமுறைகளை வகுத்தும், சுற்றுலாத் துறை மூலம் வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்தால் கொடைக்கானல் சுற்றுலா மேலும் வளப்படும், தற்போதுள்ள பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். மலைகிராம சுற்றுலா திட்டத்தை விரைவில் அமல்படுத்த தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது மலை கிராம மக்களும் எதிர்பார்க்கின்றனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments