Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாரத்னம் Review: ஹரி - விஷால் இணைந்து பழி தீர்த்தது யாரை?  | Ratnam movie...

ரத்னம் Review: ஹரி – விஷால் இணைந்து பழி தீர்த்தது யாரை?  | Ratnam movie review


சிறுவயதில் தாயை இழந்த ரத்னம் (விஷால்) தன்னை அரவணைக்கும் பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்துக்குச் செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம்எல்ஏவாக மாறியிருக்கிறார் பன்னீர்செல்வம். அவருடனேயே இருந்து உள்ளூரில் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்ற ரீதியில் அடிதடி, பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார் ரத்னம்.

இப்படியான சூழலில் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஜனனியை (ப்ரியா பவானி சங்கர்) சந்திக்கும் ரத்னம் அவர் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார். அத்துடன் நிற்காமல், ஜனனியை கொல்ல வரும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்து, வான்டடாக சென்று அவரை பாதுகாக்கும் வாட்ச்மேன் வேலையும் பார்க்கிறார். ஜனனி மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கு என்ன காரணம்? ஜனனியை வில்லன்கள் கொல்லத் துடிப்பது ஏன்? அப்புறம் என்ன ஆகிறது? – இதுதான் திரைக்கதை.

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி – விஷால் காம்போவுக்கு இது 3-ஆவது படம். தமிழக – ஆந்திர எல்லையில் கதைக்களத்தை அமைத்திருக்கும் ஹரி, நிலப் பிரச்சினை, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத சூழல், தாய்ப் பாசம், வழக்கமான காதலை தவிர்த்தது, பாஸ்ட் கட்ஸை மூட்டை கட்டியது என காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளார் ஹரி. இவையெல்லாம் இடைவேளைக்கு முன்பான காட்சிகளை ஓரளவு நகர்த்த உறுதுணையாக உள்ளன.

ஓட்டுக்கு பணம் வாங்குவதை பகடி செய்வது, மதுவுக்கு எதிரான வசனங்கள், அரசியல் சார்பு வசனங்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். ஆனால் நாயகன் பெரும்பாலும் மது குடித்துக்கொண்டிருப்பது முரண். ஓரிடத்தில் வரும் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி ரசிக்க வைத்தாலும், அதற்கான தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அடிதடி ரவுடி ஹீரோ, அன்பு கொண்ட பெண்ணுக்காக வில்லன்களை எதிர்ப்பது, காலவாதியான தனி காமெடி ட்ராக், நகைச்சுவை என்ற பெயரில் யோகிபாபுவின் உருவக்கேலி, அதிகாரம் படைத்த எம்.எல்.ஏ, அடிபணிந்து வேடிக்கை பார்க்கும் போலீஸ், ஆந்திரா வில்லன்கள், நிமிடத்துக்கு ஒரு சண்டைக்காட்சி, அழுதுகொண்டு ஹீரோவிடம் அடைக்கலம் தேடும் நாயகி என பார்த்து சலித்த காட்சிகளின் ரீ-ரிலீஸ் போல இருப்பது அயற்சி.

பொதுவாக ஹரி படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் கைகொடுக்கும். ஆனால், இம்முறை அவர் கையாண்டிருக்கும் தாய்ப் பாசம் செல்ஃப் எடுக்கவில்லை. அதற்கான வசனங்களிலும் அழுத்தமில்லை. போலவே சில சண்டைக்காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ரீபீட் மொடில் கையை வெட்டுவது, விரலை வெட்டுவது, ரத்தம் தெறிப்பது, இடையில் கத்தி பேசும் விஷாலின் சப்தம் வேறு, இப்படியான வில்லன்களை தாண்டி பார்வையாளர்களை ‘வதம்’ செய்யும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி தேவை.

இதை பொறுத்துக்கொண்டாலும் இறுதியில், ‘ரவுடி’ ஐயர் சம்பவங்கள் எல்லாம் கதைக்கு எந்த வகையில் பயன்படட்டது என்பதை தாண்டி, இதன்மூலம் ஹரி சொல்ல வருவது என்ன என்பது தெரியவில்லை. தவிர்த்து ஒரே படத்தில் இரண்டு க்ளைமாக்ஸை பார்க்க வைத்து கதையை இழுத்திருப்பது ஏசி அறையிலும் எரிச்சல்.

‘கொள்கைகாக கொலை செய்யும் ரவுடி’ என்ற உயரிய எண்ணம் கொண்ட விஷாலின் அந்த எனர்ஜி இன்னும் குறையவில்லை. சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்கிறார். ஆனால், வசனங்களை இழுத்துப் பேசுவதும், கத்தி பேசுவதும், உணர்வுபூர்வமான காட்சிகளில் வெளிப்படும் செயற்கைத் தன்மையும் நெருடல்.

எமோஷனல் காட்சிகளில் ப்ரியா பவானி சங்கரின் தேர்ந்த நடிப்பு கவனம் பெறுகிறது. கதாபாத்திரத்துடன் பக்காவாக பொருந்தும் சமுத்திரகனி சில இடங்களில் மாஸ் காட்டுகிறார். யோகிபாபுவுக்கு வழக்கமாக சிரிக்க வைக்க முயல்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் என்ட்ரிக்கும், அவரின் வசனங்களுக்கும் திரையரங்குகளில் அப்ளாஸ். முரளிகுமாரின் வில்லன் கதாபாத்திரம் வீண்டிப்பு. தவிர்த்து ஜெயபிரகாஷ், மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி உள்ளிட்டோர் தேவையுணர்ந்து நடித்துள்ளனர்.

ஆந்திரா காரத்துக்கு ஏற்ற தேவிஸ்ரீபிரசாத்தின் வீரியமான பின்னணி இசை சில சண்டைக் காட்சிகளுக்கு ‘ஹைப்’ ஏற்றுகிறது. ‘உயிரே என் உயிரே’ கேட்கும் ரகம். சிங்கிள் ஷாட்டும், சண்டைக்காட்சி ஒன்றில் அருவாளுடன் கேமரா பயணிக்கும் இடமும் ஒளிப்பதிவாளர் சுகுமாரின் தனித்துவத்தையும் மெனக்கெடலையும் உணர்த்துகிறது.

முன்பின் பழக்கமில்லாத ப்ரியா பவானி சங்கரை வில்லன்களிடமிருந்து காக்க மெனக்கெடுகிறார் விஷால். அதே கரிசனத்தை பார்வையாளர்களிடமும் காட்டியிருக்கலாம். ஆக, வெப்ப அலைக்கு ஏதுவாக ஏசி தியேட்டர்களை ரசிகர்கள் நாடிய நிலையில், ஹரி – விஷால் இணைந்து பழி தீர்த்தது என்னவோ..!



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments