Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருப்பவருக்கே அணியில் வாய்ப்பு: ரோகித் சர்மா மனம் திறப்பு |...

டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருப்பவருக்கே அணியில் வாய்ப்பு: ரோகித் சர்மா மனம் திறப்பு | Only those who are interested in Test cricket have a chance in the team: Rohit Sharma opens up


ராஞ்சி: அணித் தேர்வைப் பொறுத்தவரை எந்த வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருக்கிறதோ, அவருக்குத்தான் வாய்ப்பளித்து வருகிறோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவருக்கு சொந்தக் காரணங்கள் இருந்தாலும் இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி காயமடைந்தால் ஐபிஎல் ஆடமுடியாமல் போய் விடுமோ என்ற கவலை அதிகமிருந்திருக்கலாம் என்று பலராலும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. ஜெய் ஷா கூறிய தொனியும் இதனை சூட்சுமமாகத் தெரிவிப்பதாகவே உள்ளது.

அதாவது, ஐபிஎல் போட்டிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டையோ, டெஸ்ட் போட்டிகளையோ தவிர்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தொனியில் ஜெய் ஷா எச்சரிக்கை விடுத்ததையும் ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் போன்றோர் உள்நாட்டு கிரிக்கெட் ஆடாமல் தவிர்ப்பதையும் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், ரோகித் சர்மா கூறியது: “டெஸ்ட் கிரிக்கெட் தான் கடினமான வடிவம். எனவே கடினமான டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க வேண்டும் என்றால் அதற்குரிய தாகமும் வேட்கையும் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். எந்த வீரருக்கு இந்தத் தாகம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்குகிறோம். எந்தெந்த வீரர்களுக்கு அந்த வேட்கை உள்ளது அல்லது யாருக்கெல்லாம் இல்லை என்பது சுலபமாகத் தெரிந்து விடும். இந்த இடத்தில் இருக்க விரும்பாத வீரர்களை நாங்கள் எளிதில் கண்டுப்பிடித்து விடுவோம். எங்களுக்கு எளிதில் தெரிந்து விடும்.

எந்த வீரருக்கு அந்தத் தாகம் உள்ளதோ, எந்த வீரர் இங்கு நீடித்து ஆட விரும்புகிறாரோ, கடினமான சூழ்நிலைகளில் ஆட விரும்புகிறார்களோ அவர்களுக்கே அணித்தேர்வில் முன்னுரிமை அளிக்கிறோம். ஆகவே விஷயம் எளிதானது. யார் யாரிடம் அந்த வேட்கை இல்லையோ அவர்களை இந்த இடத்திற்கு தேர்வு செய்து ஆடவைப்பது விரயமான காரியம். இப்போது உள்ள அணியில் அது போல நீடித்து ஆடக்கூடிய வேட்கை உள்ளவர்கள் தான் ஆடுகின்றனர்.

இந்த உயரிய மட்டத்தில் வாய்ப்புகள் கொஞ்சமாகவே கிடைக்கும். அதைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இழக்க வேண்டியதுதான். நிறைய வீரர்களுக்கு இப்போது இந்த மட்டத்தில் ஆட வேட்கை உள்ளது. நாங்களுமே வாய்ப்பை இழந்துள்ளோம்.

எனவே வாய்ப்புகளை வெற்றியாக மாற்றுபவர்கள்தான் நீடிப்பார்கள். ஐபிஎல் ஒரு நல்ல வடிவம்தான், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் கடினமான வடிவம். இதில் திறமையை வெளிப்படுத்துவது அத்தனை சுலபமல்ல. இந்த 4 டெஸ்ட் போட்டிகளுமே கடினமாகத்தான் இருந்தது. கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இளம் வீரர்கள் இந்த இடத்தில் நீடிக்க விரும்புகிறார்கள் என்பது இந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் தெரிந்தது. அவர்கள் கடினமான பாதையில் பயணம் மேற்கொண்டு இந்த நிலைக்கு வந்துள்ளவர்கள்.

நான் இளம் வீரர்களிடம் பேசிய போது உற்சாகமாகத்தான் இருந்தது. எனவே நானும் ராகுல் திராவிட்டும் அவர்களுக்கான சூழ்நிலையைக் கொடுப்பதையே பெரிதாகக் கருதுகிறோம். இந்த இடத்திற்கு வருவதென்றால் என்னவென்பதை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். எனவே அவர்களிடம் போய் அடிக்கடி பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

துருவ் ஜூரெல் தன் 2வது டெஸ்ட்டில் தான் ஆடுகிறார். ஆனால் தன் பொறுமையையும் நிதானத்தையும் காட்டினார். அவரிடம் ஷாட்களும் உள்ளன. முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 90 ரன்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 2வது இன்னிங்சில் கடினமான பிட்சில் நிறைய முதிர்ச்சியுடன் ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். இதுபோன்ற இளம் வீரர்கள் இந்திய அணிக்கு பெரிய பிளஸ். இப்போது அணிக்குள் வந்தவர்கள் இந்த வடிவத்தில் நீடித்து ஆடப்போகிறவர்கள்” என்று ரோகித் சர்மா கூறினார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments