Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeதேசியம்கேரளா | வயநாட்டில் ஆனி ராஜாவை களமிறக்கிய இந்திய கம்யூனிஸ்ட்; ராகுல் காந்திக்கு யோசனை |...

கேரளா | வயநாட்டில் ஆனி ராஜாவை களமிறக்கிய இந்திய கம்யூனிஸ்ட்; ராகுல் காந்திக்கு யோசனை | CPI fields Annie Raja from Wayanad 


திருவனந்தபுரம்: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம், பனியன் ரவீந்திரன், ஆனி ராஜா, விஎஸ் சுனில் குமார், சிஏ அருண்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பெயர்கள் கட்சியின் மாவட்ட குழுக்களால் பரிந்துரைக்கப்பட அதிலிருந்து வேட்பாளர்கள் மாநில செயற்குழு, மாநில கவுன்சிலால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கேரள சிபிஐ தெரிவித்துள்ளது.

கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அதிலும் ராகுல் காந்தி தற்போது எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆனி ராஜா மிகுந்த கவனம் பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உ.பி.,யின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் ஸ்மிருதி இராணியிடம் அவர் தோல்வியுற வயநாட்டில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்தமுறை வயநாட்டில் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளராக ஆனி ராஜாவை இந்திய கம்யூனிஸ்ட் களமிறக்கியுள்ளது. ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து ஆனி ராஜா அளித்த பேட்டியில், “எல்டிஎஃப் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் நீண்ட காலமாக இந்த 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இம்முறையும் இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இங்கே போட்டி எல்டிஎஃப்-க்கும் யுடிஎஃப்-க்கும் இடையேதான். இங்கே அந்த நிலை மாறவில்லை. கடந்த முறையும் வயநாட்டில் சிபிஐ போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் களம் காண்கிறோம்”.என்றார்.

மதிநுட்பத்துடன் முடிவெடுக்க வேண்டும்.. வயநாட்டில் ஆனி ராஜாவை வேட்பாளராக அறிவித்தது குறித்தும், ராகுல் காந்தி மீண்டும் அங்கு களமிறக்கப்பட்டால் எப்படி சிபிஐ எதிர்கொள்ளும் என்பது பற்றியும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “வயநாட்டில் காங்கிரஸ் ராகுல் காந்தியை வேட்பாளரை நிறுத்தட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின்போது அது பாஜகவை எதிர்க்கிறதா அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்க்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாஜகவை எதிரியாகக் கருதும் பட்சத்தில் அவர் உ.பி.யில் தான் களம் காண வேண்டும். இங்கே கேரளாவில் பாஜகவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இண்டியா கூட்டணியில் உள்ள எங்களுடன் மோத இந்தி இதயப்பகுதியான உ.பி.யில் ஒரு பெரிய போரை ராகுல் காந்தி கைவிடுவது சரியாக இருக்காது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் ஞானத்துடன் முடிவெடுக்க வேண்டும்.

மேலும், கேரளாவில் உள்ள சிறுபான்மையினரும், மதச்சார்பற்ற கொள்கை கொண்ட இந்துக்களும் காங்கிரஸின் மதச்சார்பற்ற கொள்கைகள் மீது தற்போது சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதேபோல், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸின் தெளிவற்ற நிலைப்பாடும் வரும் மக்களவைத் தேர்தலில் எல்டிஎஃப் கூட்டணிக்கே சாதகமாக உள்ளது. கட்சித் தாவல்கள் பற்றியும் காங்கிரஸுக்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸுக்கு வாக்களிப்பது உண்மையில் பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றதுதான் என கேரள மக்கள் நம்புகின்றனர்” என்றார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments