Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்‘வெண்மணி கிராமத்தில் 127 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி’ - ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி...

‘வெண்மணி கிராமத்தில் 127 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி’ – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி  | Permission to build 127 houses Venmani village Minister I Periyasamy to Governor


பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி தந்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

“நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 75 பயனாளிகள் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மீதமுள்ள 52 பயனாளிகளால் வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒன்றிய அரசால் 31,051 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டு 23,110 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1.20 இலட்சம் ஆகும். இத்திட்டத்தில் ஒன்றிய அரசு தன் பங்காக வீடு கட்ட 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது. ஆனால், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மாநிலத்தின் நிதி பங்களிப்பாக 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.

இதனுடன் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் மூலம் ரூ.26,460, தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.12,000 உடன் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு வீட்டின் அலகுத் தொகை ரூ.2,78,460 ஆக உள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் தான் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அதிக தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வரசு பதவியேற்றவுடன் 2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே அனுமதி வழங்கி முடிவுறாமல் இருந்த வீடுகளையும் சேர்த்து 07.05.2021-க்கு பின்னர் இதுவரை 2,93,277 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வரசு பதவியேற்ற நாளான 07.05.2021-க்கு பிறகு அலகு தொகையாக ஒன்றிய அரசு நிதியிலிருந்து ரூ.2933.31 கோடி வரப்பெற்றுள்ளது. மாநில அரசு இத்திட்டத்துக்கு ரூ.3116.54 கோடி நிதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் ஊராட்சி வாரியாக வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒன்றிய அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகள் இல்லாத ஊராட்சிகளிலிருந்து, தகுதி வாய்ந்த பயனாளிகள் அதிகமுள்ள ஊராட்சிகளுக்கு வீடுகளை மாற்றி வழங்க, ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், வெண்மணி போன்ற ஊராட்சிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தேவைக்கேற்ப வீடுகள் வழங்க இயலவில்லை.

தற்போது தமிழ்நாடு அரசால் குடிசை வீடுகளுக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்மணி ஊராட்சியில் மொத்தம் 66 குடிசை வீடுகள் தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்காணும் குடிசை வீடுகள் தமிழ்நாடு அரசின் ஊரக குடியிருப்பு திட்டம் மூலம் கான்கிரிட் வீடுகளாக இனி வரும் காலங்களில் மாற்றப்படும்.

மேலும் வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி அவர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கியதும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 1970-களிலேயே உருவாக்கி நகர்ப்புறங்களில் குடிசையில் வசித்த வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி வழங்கியதும், ஊரகப்பகுதிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி எண்ணற்ற ஏழை மக்கள் பயனடைய வழிவகுத்ததும் இந்த அரசு தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் தொடர்ந்து செயல்படும் இந்த திராவிட மாடல் அரசு, ஊரகப் பகுதி மக்களுக்கு தேவையான வீடு கட்டும் திட்டத்தினை தொடர்ந்து திறன்பட செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமூக வலைதள பதிவு: “நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments