Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்தமிழக அரசுக்கு மாணவர்கள் நலன்தான் முக்கியம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சு @ மதுரை |...

தமிழக அரசுக்கு மாணவர்கள் நலன்தான் முக்கியம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சு @ மதுரை | Welfare of students is important to Tamil Nadu Govt – School Education Minister Speech @ Madurai


மதுரை: மதுரை கலைஞர் நுற்றாண்டு நூலகத்தில் இன்று (திங்கள்கிழமை) பள்ளிக் கல்வித்துறை சார்பில் 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா வரவேற்றார்.

இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டாலும், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தவொரு துறை வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் மனித வளத்தை உருவாக்கும் பெரும் பங்கு பள்ளிக் கல்வித்துறைக்கு உண்டு.

பள்ளிக்கல்வித் துறையின் ஓர் அங்கமாக தொடக்கக் கல்வி இயக்ககம் உள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஒன்றிய அளவிலான ஆய்வு அலுவலர்களாக செயல்படுபவர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.

தமிழகத்திலுள்ள 414 ஒன்றியங்களில் 851 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதில் நடப்பாண்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடந்தது. அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. பணி நியமன ஆணை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் பணியிடங்களில் தங்களது பொறுப்புணர்ந்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை மாவட்டக்கல்வி அலுவலர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியருக்கு அமைச்சர் பாராட்டு: மதுரையில் அழகர்கோவில் சாலையிலுள்ள கோர்ட்யார்ட் ஹோட்டலில் ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி வளர்ச்சி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்கொடையாளர்களை பாராட்டி கவுரவித்தார்.

அதன்படி, மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த கனரா வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தானமாக வழங்கினார். அவரது செயலை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரின் குடியரசு தின சிறப்பு விருது வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து இன்று மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நில தானம் வழங்கிய ஆயி என்ற பூரணத்திற்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

அதேபோல், மதுரை மாநகராட்சி பள்ளி வளர்ச்சிக்கு ரூ.1.10 கோடி நிதியளித்த அப்பள வியாபாரி ராஜேந்திரன் என்பவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். அதேபோல், பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் நிதியளித்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

437 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இன்று தனியார் பள்ளி இயக்ககத்தின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, சிவகங்கை. ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த 437 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற வாரியப் பள்ளிகள் என மொத்தம் 12,631 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஏறத்தாழ 57 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.

தமிழக அரசுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என்ற பாகுபாடும் இல்லை. ஒட்டுமொத்தமாக மாணவர்கள் நலன்தான் முக்கியம். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருப்பதற்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியே காரணம். கல்வி வளர்ச்சியில் அரசுப் பள்ளிகளின் பங்களிப்பைப்போல், தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை மண்டலம் வாரியாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மண்டலங்களில் 1,488 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மதுரை, தேனி, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 437 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். இவ்விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments