Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்தண்டவாளத்தை தாண்டாதே! - ஆவடி, திருவள்ளூர் கிராஸிங்கில் ரயில் மோதி கடந்தாண்டு 105 பேர் உயிரிழப்பு...

தண்டவாளத்தை தாண்டாதே! – ஆவடி, திருவள்ளூர் கிராஸிங்கில் ரயில் மோதி கடந்தாண்டு 105 பேர் உயிரிழப்பு | train collision issue at Avadi and Tiruvallur crossing


திருவள்ளூர்: ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல்நிலையங்களின் எல்லைக்குள் கடந்த ஆண்டில் ரயில்களில் மோதி 105 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடக்க சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்களை பயன்படுத்தவேண்டும் என ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை–அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலைய பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்கள், விபத்துகள் உள்ளிட்டவைகள் தொடர்பான வழக்குகளை சென்னை- பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில்வே காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை ரயில்களில் மோதி நடக்கும் உயிரிழப்பு சம்பவங்கள்தான்.

இந்நிலையில், ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த ஆண்டில் கவனக்குறைவோடு ரயில் தண்டவாளங்களை கடந்ததால் 105 பேர், ரயில்களில் மோதி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களை சேர்ந்த போலீஸார் தெரிவித்ததாவது:

சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், அம்பத்தூர் ரயில் நிலையம் முதல், பட்டாபிராம் இ-டிப்போ வரை உள்ள சுமார் 15 கி.மீ. தூர பகுதிகள் ஆவடி ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் உள்ளன. அதேபோல், நெமிலிச்சேரி ரயில் நிலையம் முதல், கடம்பத்தூர் ரயில் நிலையம் வரை உள்ள 21 கி.மீ. தூர ரயில்வே பகுதிகள் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் உள்ளன.

இவ்விரு காவல் நிலைய எல்லைக்குள், திருமுல்லைவாயல், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, புட்லூர், திருவள்ளூர் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆவடி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைகளில் தண்டவாளத்தை கவனக் குறைவோடுகடப்பது போன்ற செயல்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆவடி ரயில்வே காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-ம் ஆண்டுரயில்களில் மோதி 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக் குறைவோடு ரயில் தண்டவாளங்களை கடந்ததால் 48 ஆண்கள், 12 பெண்கள் என, 60 பேர் உயிரிழந்துள்ளனர்; இரு ஆண்கள் ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணித்த போது, தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் ரயில்களில் மோதி 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக் குறைவோடு ரயில் தண்டவாளங்களை கடந்ததால், 40 ஆண்கள், 5 பெண்கள் என, 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததந்தை, 2 மகள்கள் என 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்கள், ஒரு பெண் என 6 பேர் ரயில்களில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

மொபைலில் பேசியபடியே… ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் கணிசமானவை, மொபைல் போன்களில் பேசிக்கொண்டும், ஹெட்போன் மூலம் திரைப்பட பாடல்களை கேட்டுக்கொண்டும் ரயில் தண்டவாளங்களை கடந்ததால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, எங்கள் எல்லைகளில் உள்ள ரயில் நிலையங்களில் நாள்தோறும் ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், தொடர் அறிவுறுத்தல்களை வழங்கியும் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. இனியாவது, ரயில்வே தண்டவாளங்களை கடக்க சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்களை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments