Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டு13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் | 13th...

13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் | 13th National Senior Hockey Championship Tamil Nadu advances to semi finals


சென்னை: ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழக அணி உத்தரபிரதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர்ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒருஆட்டத்தில் தமிழ்நாடு – உத்தரபிரதேசம் அணிகள் மோதின.

27-வது நிமிடத்தில் உத்தரபிரதேச அணி முதல் கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பில் மணீஷ் சஹானி அடித்த கோல் காரணமாக உத்தரபிரதேசம் 1-0 எனமுன்னிலை வகித்தது. அடுத்த 3-வது நிமிடத்தில் உத்தரபிரதேச அணிக்கு மேலும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சுனில் யாதவ் கோலாக மாற்ற முதல்பாதியில் உத்தரபிரதேச அணி 2-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் தமிழ்நாடுஅணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சுந்தரபாண்டி கோலாக மாற்றினார். கடைசி 8 நிமிடங்கள் வரை உத்தரபிரதேச அணி 2-1 என முன்னிலை வகித்தது. 52-வது நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

போட்டி முடிவடைய ஒரு நிமிடம்மட்டுமே இருந்த நிலையில் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி மீண்டும் ஒரு பீல்டு கோல் அடிக்க உத்தரபிரதேச அணி அதிர்ச்சியில் உறைந்தது. இறுதிக்கட்டத்தில் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி அடித்த இருகோல்களின் உதவியால் தமிழ்நாடு அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னறியது.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா – ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இதில் கர்நாடகா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் நுழைந்தது. அந்த அணி சார்பில் ஹரிஷ் 2 கோல்களும் (46 மற்றும் 49-வதுநிமிடங்கள்) கவுடா சேஷே (23-வதுநிமிடம்), லிகித் (32-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஷூட்அவுட்.. ஹரியாணா – ஒடிசா அணிகள் மோதிய கால் இறுதி ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஹரியாணா அணி சார்பில் சஞ்ஜய் 8 மற்றும் 15-வது நிமிடங்களில் கோல் அடித்தார். ஒடிசா தரப்பில் 22-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸும், 43-வது நிமிடத்தில் லக்ரா ஷில்லானந்தும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹரியாணா 3-2 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.

பஞ்சாப் அசத்தல்: கடைசியாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் – மணிப்பூர் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இரு கோல்களும் (31, 51-வது நிமிடங்கள்) பர்தீப் சிங் (6-வது நிமிடம்),சுக்ஜீத் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மணிப்பூர் தரப்பில் சிங்லென்சனா சிங் (36-வது நிமிடம்), ரிஷியும்னம் (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து 3.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் கர்நாடகா – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments