மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் | நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் | கூர்வேல் கொடுதொழிலன் நந்தகோ பன்குமரன்||
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் | கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்||
நாரா யணனே நமக்கே பறை தருவான் | பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். (திருப்பாவை 1)
மார்கழி மாதம் இனிதே பிறந்தது. ஆயர்பாடியில் வசிக்கும் இளம்பெண்களே! இப்போது நீராடக் கிளம்பலாம் வாரீர்! கூர்மையான வேலுடன் நம்மையெல்லாம் பாதுகாக்கும் நந்தகோபன், அழகிய கண்களை உடைய யசோதைபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய சந்திரர்களைப் போல் பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனுமான, ஸ்ரீமன் நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் புரிய காத்திருக்கிறான். அவனைப் பாடிப் புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும் என்று கூறி தனது தோழியரை பாவை நோன்பிருக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
சிவதரிசனம் பெற்று மகிழ்வோம்!
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் | சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்||
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் | மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்||
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து | போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்||
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே | ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்|| (திருவெம்பாவை 1)
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரை தரிசிக்க காத்திருந்த பெண்கள், தங்கள் தோழிக்கும் அந்த நற்பேறு கிடைக்க வேண் டும் என்ற விருப்பத்தில் அவளை எழுப்புகின்றனர். ஆதியும் அந்தமும் இல்லாத காணு தற்கு அரிய பெருமைகள் உடைய சிவபெருமானை போற்றி, நாங்கள் பாடுவதை நீ கேட்க வில்லையா? ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடையவளே! உடனே எழுந்து வருக என்று அவளிடம் கூறுகின்றனர். ஆனால் தோழி, இறைவனின் புகழ் கேட்டு தன்னிலை மறந்து, இருந்த இடத்திலேயே இருக்கிறாள் என்கிறார் மாணிக்கவாசகர்.