திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருமலையில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசியை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற் காக விரைவில் தரிசன டோக்கன் களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.இதற்கான சில நிபந்தனைகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது.
சொர்க்க வாசல் தரிசனத்துக்கு, தரிசன டோக்கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக முதியோர், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்று திறனாளிகள், ராணுவ வீரர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், ரூ.300 சிறப்பு தரிசனமும் இருக்காது. அனைத்து பக்தர்களும் வெறும் சர்வ தரிசனம் மூலமாக மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க இயலும். டோக்கன்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திருமலைக்கு பக்தர்கள் வர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே காத்திருக்கும் நேரமும் குறையும். முன்னாள் தேவஸ்தான அறங்காவலர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனங்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்காக 10 நாட்கள் வரை 3000 ஸ்ரீ வாரி தன்னார்வ தொண்டு சேவகர்கள் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.