இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அரசு ஊழியர்கள், பொருளாதார வல்லுநர்கள் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களாக உள்ளனர் என்று ஜி20 அமைப்பின் இந்தியாவுக்கான தூதர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
16-வது நிதி ஆணையத்தின் தலைவரான அரவிந்த் பனகாரியா எழுதிய “தி நேரு டெவலப்மெண்ட் மாடல்” புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமிதாப் காந்த் கூறியது: சுதந்திரமான சந்தைகளை நம்பும் பொருளாதார நிபுணர் என்ற காரணத்துக்காக பனகாரியா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தடையற்ற வர்த்தகத்தின் மீது அவருக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் அவரைப் போன்ற பொருளாதார வல்லுநர்கள் மிக குறைவு. சுதந்திரமான தொழில் இல்லாமல் நீண்ட காலத்துக்கு இந்தியா அதிக விகிதத்தில் வளர முடியாது என்று நானும் நீண்ட காலமாக நம்பி வருகிறேன்.
மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணியாற்றியுள்ளேன். அங்கு நான் சந்தித்த ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களாக இருந்தனர். குறிப்பாக, கேரளாவில் சிடிஎஸ்-ல் இருந்து வெளிவரும் அனைத்து பொருளாதார நிபுணர்களுக்கும் இடதுசாரி சிந்தனை அதிகம். இடதுசாரிகளை விட காங்கிரஸ் தீவிர இடதுசாரிகளாக இருந்ததை நம்ப முடியவில்லை. இந்தியா அதிக விகிதத்தில் வேகமாக வளர வேண்டும் என்றால் உண்மையில் பல விஷயங்களை தகர்க்க வேண்டும் என அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறு அமிதாப் காந்த் கூறினார்.