புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் மின்சாரத்திருட்டு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு கண்டெடுக்க்பட்ட 46 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹனுமன் கோயில் பூஜைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
உ.பி.யின் சம்பலிலுள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்ட புகாரில் சிக்கியது. இதுதொடர்பான நீதிமன்ற வழக்கில் மசூதியில் கடந்த மாதம் 24-ம் தேதி களஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இவ்வழக்கில் அதிகமானவர்கள் மீது வழக்குகள் பதிவாகி பலர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவானவர்களை தேடும் பணியில் சம்பல் போலீஸார் இறங்கியுள்ளனர்.
மேலும், சம்பலின் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மின்சாரத் திருட்டுகள் நிகழ்வதாகப் புகார் எழுந்தன. இப்புகாரில், அரசு நிலங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சம்பல் மாவட்ட போலீஸ் எஸ்பியான கிருஷ்ண குமார் பிஷ்னோய் தலைமையிலான காவல்படை உதவியுடன் உ.பி. மின்சாரத்துறை அதிகாரிகள் கலவரம் நடைபெற்ற காக்கு சராய், முஸ்லிம்கள் பகுதிகளில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது அருகிலுள்ள தீபா சராய் பகுதியில் பாழடைந்த ஒரு ஹனுமர் கோயில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கோயிலின் முன்பாக சுவர்கள் எழுப்பப்பட்டு பூஜைகள், தரிசனம் இல்லாமல் கோயில் மூடப்பட்டிருந்தது. ஹனுமன் கோயிலான அதன் கோபுரம் மட்டும் மேற்புறம் எழுந்தபடி இருந்தது. இதைப் பார்த்து உள்ளே சென்று சோதனை செய்த காவல்துறையினர் வியப்படைந்தனர்.
உள்ளே, கருவறையில் ஹனுமர் சிலை, சிறிய வடிவில் நந்தியின் முன்பாக சிவலிங்கமும் உள்ளது. இப்பகுதியில் அதிகமாக வாழ்ந்த ரஸ்தோகி எனும் சமூகத்தினரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமையானதாகக் கருதப்படும் இக்கோயில் சுமார் 46 வருடங்களாக பூஜை, பராமரிப்பு இன்றி மண்கள் படிந்த நிலையில் உள்ளது. இவற்றை சுத்தம் செய்த சம்பல் போலீஸார் அந்த கோயில் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். இதில், சுமார் 46 வருடங்களுக்கு முன்புவரை இப்பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்த போது இக்கோயிலில் பூஜைகள் நடைபெற்ற விவரம் தெரியவந்தது.
இது குறித்து சம்பல் மாவட்ட ஆட்சியரான ராஜேந்திர பன்ஸியா கூறும்போது, ‘எங்கள் சோதனையில் மசூதியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சாரத் திருட்டுகளும், ஆக்கிரமிப்புகளும் இருந்தது தெரிந்துள்ளது. மதக்கலவரங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் தீபா சராய் பகுதியிலிருந்து இந்துக்கள் வெளியேறி விட்டனர். இதனால், அவர்களது இக்கோயிலை சுற்றி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவர்கள் மீது விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளோம். மூடப்பட்ட இக்கோயில் சுத்தம் செய்து விரைவில் பூஜைக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.