புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஆற்றிய முதல் உரையைவிட, தனது தங்கை பிரியங்கா காந்தியின் முதல் உரை சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதியின் எம்பியான பிரியங்கா காந்தி வத்ரா, முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த விவாதத்தில் பேசிய பிரியங்கா காந்தி, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அவரது முதல் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அருமையான பேச்சு. எனது முதல் உரையைவிட அவரது உரை சிறப்பாக இருந்தது” என்று கூறினார். பிரியங்கா காந்தியின் முதல் பேச்சு “அற்புதம்” என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், அவரது அம்மாவுமான சோனியா காந்தி பாராட்டு தெரிவித்தார்.
தனது மனைவியின் முதல் நாடாளுமன்ற உரை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தொழிலதிபர் ராபர்ட் வதேரா, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாடு முழுவதிலும் தனக்கு கிடைத்த அனுபவத்தைப் பற்றி மிகத் தெளிவாகப் பேசினார். மக்களின் சிரமங்களைப் பற்றிப் பேசினார். மக்களவை சரியாகச் செயல்பட வேண்டும், அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். பல்வேறு மாநில மக்கள் சந்திக்கும் சிரமங்களை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். நான் மிகவும் பெருமைப்படுகிறேன், காங்கிரஸ் வலுவாக முன்னேறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, “அருமையான பேச்சு. மிகவும் நல்லது. அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அவர்கள் இந்த நாட்டின் பெண்களையும் மக்களையும் பாதுகாக்கவில்லை என்பது போன்ற அனைத்து உண்மைகளையும் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளார். அவரது செயல்திறனில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தியின் முதல் நாடாளுமன்ற உரை: அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு