புதுடெல்லி: நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக பிரியங்கா காந்தி மக்களவையில் இன்று உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த விவாதத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நம் நாட்டில் உரையாடல் மற்றும் விவாதத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் உள்ளது. இந்த பாரம்பரியம் எல்லா மதங்களிலும், தத்துவ நூல்களிலும், வேதங்களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகிறது. விவாதமும் உரையாடலும் நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது.