நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் 468-வது கந்தூரி விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9-ம் தேதி நள்ளிரவு வாணவேடிக்கை, 10-ம் தேதி பீர்வைக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி, நேற்று இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, நாகை அபிராமி அம்மன் கோயில் முன்புறமிருந்து இருந்து தாரை, தப்பட்டைகள் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து நாகூரைச் சென்றடைந்தது. வழியெங்கும் உள்ள வீதிகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு, பெரிய ரதத்தின் மீது பூக்களை வீசி, பிரார்த்தனை செய்தனர்.
சந்தனக்கூடு ஊர்வலம் நாகூரை வந்தடைந்ததும், அங்குள்ள கூட்டுப் பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதப்பட்டது. பின்னர், நாகூர் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, நூல் கடைத் தெரு வழியாக வந்து, அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக் குடத்தை வாங்கி கூட்டில் வைத்து, ஊர்வலமாக சந்தன மகாலை சந்தனக் கூடு சென்றடைந்தது.
தொடர்ந்து, தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக் குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை (டிச. 13) மாலை கடற்கரைக்கு பீர் ஏகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 15-ம் தேதி இரவு புனித கொடி இறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.