கோவை: “ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது” என தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்துக்கு இன்று (டிச.11) வந்தார். ஈஷா வளாகத்தில் உள்ள தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர், அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செய்தியாளர்களிடம் கூறியது: “ஈஷா யோகா மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம். திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமூலர், தாயுமானவர், பதஞ்சலி முனிவர் வரிசையில் நம்முடைய தருமை ஆதீனமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது.
இக்கலையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என 4 நிலைகளாக சொல்லப்படுகிறது. அத்தகைய மிகவும் அற்புதமான யோக கலையை, ஈஷா நிறுவனர் சத்குரு உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருவது பாராட்டுக்குரியது.
நம்முடைய மரபில் சிவபெருமானும் மரமும் ஒன்று. சிவபெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல், மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்சிஜனை வழங்குகின்றன.
அந்த வகையில், மரங்கள் வளர்க்கும் சேவையை சத்குருவும் ஈஷா யோக மையமும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், தருமை ஆதீனம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதேபோல், நூற்றுக்கணக்கான நாட்டு பசுக்களை பராமரிக்கும் மிகப்பெரிய தொண்டையும் ஈஷா செய்து வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். இப்படி, யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது” என்று அவர் கூறினார். முன்னதாக, மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையையும் ஆதீனம் ஆரத்தி காட்டி வழிப்பட்டு தொடங்கி வைத்தார்.