திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உற்சவர் நம்பெருமாளுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் இன்று காணிக்கையாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜாகிர் உசேன் கூறும்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது எனக்குள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3160 கேரட் மாணிக்கக் கல், 600 வைரக் கற்கள் மற்றும் மரகதக் கல்லைக் கொண்டு தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்கக் கல் கொண்டு வரப்பட்டு அதை கிரீடம் வடிவில் குடைந்து அதன் மீது, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு இந்த கிரீடம் செய்யப்பட்டுள்ளது. இதனை செய்வதற்கு ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆனது. கிரீடம் செய்வதற்கான பெரிய அளவிலான மரகதக் கல்லை தேடி கண்டுபிடித்து வாங்குவதற்கே 3 ஆண்டுகள் ஆனது.
உலகில் முதல் முறையாக மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வைரக் கிரீடம் இது என்பது இதன் தனி சிறப்பு. பிறப்பால் நான் இஸ்லாமியராக இருந்தாலும் ரங்கநாதர் மீது எனக்குள்ள பற்றால் இதனை செய்தேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த வைரக் கிரீடத்தின் உண்மையான மதிப்பை அவர் கூறவில்லை.