பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது.
தற்போது ‘எல்.ஐ.கே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் ‘டிராகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இப்படத்தின் மூலம் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் நாயகியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராக சாய் அபியங்கர் பணிபுரியவுள்ளார். இன்று படப் பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்குகிறது.
’குட் பேட் அக்லி’ படத்துக்கு முன்பாகவே இப்படத்தினை தயாரிக்க முடிவு செய்தது மைத்ரி மூவி மேக்கர்ஸ். ஆனால், அஜித் படம் என்பதால் அதன் பணிகளை முதலில் தொடங்கினார்கள். இப்போது பிரதீப் ரங்கநாதன் படத்தின் மூலம் தங்களது 2-வது தயாரிப்பை தமிழில் தொடங்கி இருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.