இம்பால்: மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 நீக்கக் கோரியும், தீவிரவாதிகள் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்தினர். இதில் பெண்கள், மாணவர்கள் பெரும்பாலன அளவில் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள், மாநிலத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். இந்தப் பேரணி மேற்கு இம்பால் மாவட்டத்தின் தங்கமைபாண்ட் தாவு மைதானத்தில் இருந்து இம்பால் நகர சந்தை மற்றும் க்வைராம்பண்ட் கைதேல் வழியாக குமான் லம்பேக் வரை சென்றது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்கு, ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய், சுயமரியாதை எங்களின் பிறப்புரிமை என்ற முழக்கங்களை எழுப்பினர். இந்தப் பேரணியை அனைத்து மணிப்பூர் யுனைட்டெட் ஆர்கனைசேஷன் (AMUCO) தலைமையில் 5 சிவில் அமைப்புகள் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருத்தன. பொய்ரே லேமாரோல் மேய்ரா பைபி அபுன்பா மணிப்பூர், அனைத்து மணிப்பூர் பெண்கள் தன்னார்வ அமைப்பு, COHR மனித உரிமைகள் அமைப்பு மற்றும் மணிப்பூர் மாணவர்கள் பேரவை போன்ற அமைப்புகள் பேரணியில் கலந்து கொண்டன.
பேரணியின் போது செய்தியாளர்களிடம் பேசிய AMUCO தலைவர் நந்தோ லுவாங், “மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆறு காவல் நிலைய எல்லைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்து எதிராக இந்தப் பேரணி நடந்தது” என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைத்தேயி, பழங்குடியினர்களான குகி ஸோ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட இனக்கலவரம் ஏற்பட்டது. இதில் 250க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.