தேனி: சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தரிசனத்துக்கான நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக உயர்ந்துள்ளது. எருமேலியிலேயே வாகனங்களை நிறுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய், சந்தனஅபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பின்பு 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையைச் சுற்றிலும் மழை பெய்ததால் கடுங்குளிர் நிலவியது. இதனால் பக்தர்களின் வருகை குறைந்தது. தற்போது மிதமான வெயிலுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்துள்ளது.
இதனால் பம்பை சந்நிதான படிப்பாதையில் மரக்கூட்டம், நீலிமலை கடந்து சரங்குத்தி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மலைப்பாதை என்பதால் பக்தர்கள் இளைப்பாற ஆங்காங்கே இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுக்கு கலந்த மூலிகை குடிநீர், பிஸ்கெட் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், இதமான காலநிலை நிலவுவதால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே பக்தர்களுக்கு சிரமம் இல்லாத நிலை உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தரிசன நேரம் 2மணி நேரமாக இருந்தது. தற்போது 3 முதல் 4 மணி நேரத்துக்குள் தரிசனத்தை முடிக்கும் நிலை உள்ளது என்றனர். பக்தர்கள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.
இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “வாகன நெரிசலை முறைப்படுத்தும் வகையில் பம்பையில் ஆயிரத்து 200 சிறிய வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. எருமேலியில் வீட்டு வசதி வாரியத்தின் 6.5 ஏக்கர் நிலத்தில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல், எருமேலி, பம்பை உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், வழிகாட்டவும் ஊழியர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் வாகனங்கள் இடையூறின்றி கடக்கும் நிலை உள்ளது,” என்றார்.