புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. மாநிலங்களவையை மிகவும் ஒரு சார்பாக நடத்தும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கான முன்மொழிதல் மாநிலங்களவை பொதுச் செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒருமனதாக ஆமோதித்துள்ளன. அவர் மிகவும் கவுரவமான தலைவர், மிகவும் கற்றறிந்த தலைவர், மிகவும் புலமை வாய்ந்த தலைவர், நன்கு அறியப்பட்ட அரசியலமைப்பு வழக்கறிஞர், ஆளுநராக இருந்தவர், மிகவும் மூத்தவர். நாங்கள் மதிக்கும் மனிதர். தனிப்பட்ட முறையில் நான் அவருடன் சிறந்த உறவை பேணுகிறேன்.
ஆனால், 72 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநிலங்களவையை அவர் (ஜக்தீப் தங்கர்) நடத்தும் விதம், அவர் ஒரு சார்புடையவர் என்ற எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. எங்கள் மூத்த தலைவர்களுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய மொழியில் குற்றச்சாட்டுகளை முன்வரிசை ஆளும் கட்சி எம்பிக்கள் முன்வைப்பதற்கு அவர் அனுமதிக்கிறார். இதன்மூலம் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.” என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த நதிமுல் ஹக், சகாரிகா கோஷ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவசேனாவின் (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கடிதத்தில் கையெழுத்திடவில்லை. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக், “நாங்கள் அதை ஆய்வு செய்கிறோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.” என்று கூறியுள்ளார்.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 108 உறுப்பினர்களும், இண்டியா கூட்டணிக்கு சுமார் 82 உறுப்பினர்களும் உள்ளனர். அதிமுக, ஒய்எஸ்ஆர்சிபி, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் முக்கியமான விஷயங்களில் அரசுக்கு அடிக்கடி ஆதரவளிக்கின்றன.