வெலிங்டன்: இந்திய அணியின் விக்கெட் பேட்ஸ்மேனான ரிஷப் பந்தின் பேட்டிங் அணுகுமுறையாக மனதார பாராட்டியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்.
“முதல் பந்தை எதிர்கொண்ட போது ரிஷப் பந்த் அதை அணுகிய விதத்தை நீங்கள் பார்த்தீர்களா என்று எனக்கு தெரியாது. பிட்ச்சில் இறங்கி வந்து பந்தை விளாசினார். அதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். அதை நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக களத்தில் செய்து வருகிறோம். நாங்கள் களத்தில் ரன் குவிக்கவே விரும்புகிறோம், சர்வைவ் செய்ய அல்ல. இதை நாங்கள் எப்போதும் சொல்வோம்.” என ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது களம் கண்ட பந்த், தான் எதிர்கொண்ட முதல் பந்தை மிட்-ஆஃப் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். அதை போலந்து வீசி இருந்தார். அந்த இன்னிங்ஸில் 31 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பாணியில் நிதானமாக ஆடி, ரன் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து சொல்லி உள்ள நிலையில், புரூக் இப்படி சொல்லியுள்ளது கவனிக்கத்தக்கது.
“ரிஷப் பந்த் இப்படித்தான் பேட் செய்வார். அதுதான் அவரது அணுகுமுறை. தனது ஆட்டத்தால் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பார். ஸ்கோர் போர்டை பார்த்து ஆடும் எந்தவொரு வீரரும் செய்ய தவறும் செயல் அது. ஆனால், அதுதான் ரிஷப் பந்த். அவர் அப்படித்தான்” என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான அடுத்த போட்டியில் இந்தியா பிரிஸ்பேனில் விளையாட உள்ளது. இங்கு பந்த் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கபப்டுகிறது.