ராஜஸ்தானில் ரூ.7.5 லட்சம் கோடிக்கான முதலீட்டு திட்டங்களை அதானி குழுமம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாடு சித்தபுராவில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) நேற்று தொடங்கியது. இதில் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல (எஸ்இஇசட்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி கலந்து கொண்டு பேசியதாவது:
ராஜஸ்தான் மாநில பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.7.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், 50 சதவீத முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
அந்த வகையில், உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பசுமை எரிசக்தி சுற்றுச்சூழல் அமைப்பை ராஜஸ்தானில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 100 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 2 மில்லியன் டன் ஹைட்ரஜன் மற்றும் 1.8 ஜிகாவாட் பம்ப் ஹைட்ரோஸ்டோரேஜ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த முதலீடு ராஜஸ்தானை பசுமை வேலைகளின் சோலையாக உருமாற்றும்.
இதுதவிர, எதிர்காலத்தில் ராஜஸ்தானை இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக மாற்றும் வகையில் அந்த துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் டன் கூடுதல் திறன் கொண்ட 4 புதிய சிமெண்ட் ஆலைகளை அமைக்க உள்ளோம்.
மேலும், மாநில சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க ஜெய்ப்பூர் விமானநிலையத்தில் உலகத் தரம் வாய்ந்த வசதியுடன் இணைப்பை மேம்படுத்தவும் ராஜஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கரண் அதானி தெரிவித்தார்.