சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெளிவாக தெரிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உலகளாவிய முதலீடு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் தெளிவாக காணமுடிகிறது. மிக நெருக்கடியான காலகட்டத்திலும், வலுவாக செயல்படக்கூடிய பொருளாதாரம்தான் இன்றைய உலகத்துக்கு தேவை. இதற்கு, இந்தியாவில் மிகப் பெரிய உற்பத்தி தளம் தேவை.
டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ததால், ஒவ்வொரு துறையும் பயன் அடைந்ததை இந்தியா உலகுக்கு காட்டியுள்ளது. இளைஞர் சக்தி இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. வளர்ச்சி, பாரம்பரியம் என்ற மந்திரத்தின் அடிப்படையில் நமது அரசு பணியாற்றி வருகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் மிகப் பெரிய பலனை அடைந்து வருகிறது.
சுதந்திரத்துக்குபின் அமைந்த அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்கோ, பாரம்பரியத்துக்கோ முக்கியத்துவம் அளிக்கவில்லை இதன் காரணமாக ராஜஸ்தான் இழப்பை சந்தித்தது. தற்போது ராஜஸ்தான் வளர்ச்சி மட்டும் அடையவில்லை, நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது. ராஜஸ்தானுக்கு அனைத்தையும் ஏற்றுக்கொள்வதோடு, தன்னை காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளவும் தெரியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.