புதுடெல்லி: சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான `யெஸ்மேடம்’ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயில், வேலையில் மன அழுத்தம் இருப்பதாக தெரிவித்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டெல்லி – என்சிஆர்-ஐ தளமாகக் கொண்ட சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான `யெஸ்மேடம்’, சமீபத்தில் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக ஒரு சர்வே நடத்தியுள்ளது. அதில், மன அழுத்தம் இருப்பதாக கூறிய 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR manager) அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த மின்னஞ்சலில், ‘சமீபத்தில், வேலையில் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை புரிந்துகொள்ள நாங்கள் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினோம். அதில், பலர் உங்களுடைய கவலைகளை பகிர்ந்துள்ளீர்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ள இந்நிறுவனம், உங்களின் கருத்துகளை கவனமாக பரிசீலித்தது. பணியிடத்தில் யாரும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மன அழுத்தம் இருப்பதாக குறிப்பிட்ட ஊழியர்களை விடுவிப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது, மேலும் இது குறித்த விவரங்களும் வெளிவரும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இணையத்தில் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும், மன அழுத்தத்துக்கு ஆளான ஊழியர்களின் கவலைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பணிநீக்கம் செய்வது மிகவும் மோசமானது என்று விமர்சித்து வருகிறார்கள். ஒரு பயனர்,“மிகவும் வினோதமான பணிநீக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.