ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்காக பந்தய சேவல் விற்பனை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு சேவலும் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்க தொடங்கி உள்ளது.
ஆந்திராவில் பொங்கல் பண்டிகை வந்தால் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயங்கள் களை கட்டுவது வழக்கம். இதற்கு இந்த ஆண்டும் விதி விலக்கல்ல எனும் வகையில் இப்போதே சேவல் விற்பனை தொடங்கிவிட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆன்லைன் மூலம் சேவல்களை வாங்க தொடங்கி விட்டனர்.
இதற்காகவே கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பல ஊர்களில் பந்தய சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளன. இந்த சேவல்களை வீடியோ கால் மூலம் பார்த்து வாங்குபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு சேவல் பந்தயங்கள் இந்த ஆண்டு கோதாவரி மாவட்டங்களில் மட்டும் ரூ.500 கோடி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலீஸார் இதற்கு தடை விதித்தாலும் சேவல் பந்தயங்களை தொடங்கி வைப்பதே எம்.பி. அல்லது எம்எல்ஏவாக இருப்பதால் போலீஸார் இதற்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலையே இன்னமும் உள்ளது.
சேவல் பந்தயத்திற்காக கோதாவரி மாவட்டங்களில் தற்போது சுமார் 400 சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளன. இதில், சண்டை குணம், உடல் வாகு, உயரம், நிறம், காலின் பலம் போன்றவற்றை பார்த்து சேவல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
சேவலில் நெமிலி, அப்ராஸ், பிங்களா, மைலா, டேகா, பச்சி காக்கி, ரசங்கி, நீத்துவா போன்ற ஜாதிகள் உள்ளன. இந்த வகை சேவல்களை பந்தயங்களுக்காக தயார்படுத்தி வருகின்றனர். இவற்றுக்கு பாதாம், வேக வைத்த மட்டன், முந்திரி, கேழ்வரகு, கம்பு போன்றவை வழங்கப்படுகிறது. இது தவிர, அஸ்வகந்தா பொடி, பி-காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் தண்ணீரில் கலந்து கொடுக்கப்படுகிறது.
சொல்லப்போனால் பெற்ற பிள்ளையை வளர்ப்பது போல் இந்த சேவல்களை பார்த்து, பார்த்து வளர்க்கின்றனர். வெதுவெதுப்பான வெந்நீரில் தான் இவற்றை குளிப்பாட்டுகிறார்கள். வாரத்துக்கு இருமுறை நீச்சல் பழக வைக்கின்றனர். ஒரு பந்தய சேவலை வளர்ப்பதற்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது என இவர்கள் கூறுகின்றனர்.