சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான பிரகதி, சாக்சம், ஸ்வநாத் ஆகிய கல்வி உதவித்தொகை திட்டங்களில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் தொழில்நுட்ப படிப்புகளில் பெண்கள் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் ‘பிரகதி கல்வி உதவித்தொகை’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் பொறியியல் பட்டப் படிப்புகள் மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளை படிக்கும் மாணவிகளில் தகுதியான 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சாக்சம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும், ஸ்வநாத் திட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரற்றவர்களுக்கும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பிரகதி, ஸ்வநாத் மற்றும் சாக்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று, உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் https://scholarships.gov.in என்ற வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.