வெலிங்டன்: வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், வெலிங்டனில் கடந்த 6-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 280 ரன்களும், நியூஸிலாந்து 125 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜேக்கப் பெத்தேல் 96, ஜோ ரூட் 106, ஹாரி புரூக் 55, டக்கெட் 92 ரன்கள் எடுத்தனர்.
ஜோ ரூட் எடுத்த இந்த சதம் டெஸ்ட் போட்டியில் அவரது 36-வது சதமாக அமைந்தது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்களை விளாசியுள்ள இந்திய வீரர் ராகுல் திராவிட்டின் சாதனையை சமன் செய்தார்.
இதையடுத்து 583 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடியது. ஆனால் 54.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 115 ரன்கள் குவித்தார். இதையடுத்து 323 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.