போபால்: மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மச்சல்பூர் மாவட்டம் சோயத் கலன் – சுஜால்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஊழியர்கள் தூக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அலுவலகத்தில் நுழைந்த அந்த நபர், சாமி படத்தைப் பார்த்து வணங்குகிறார். பின்னர் அங்கிருந்த ட்ராயரை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, சிசிடிவி கேமராவைப் பார்க்கிறார். அதை மூட அல்லது வேறு பக்கம் திருப்ப முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. இந்தக் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.