புதுடெல்லி: டெல்லி அருகேயுள்ள குர்கானில் கட்டப்பட்ட டிஎல்எப் கேமிலியாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.190 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு சதுர அடி ரூ.1.8 லட்சத்துக்கு விற்கப்பட்டதால், நாட்டிலேயே மிக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்ட வீடாக இது கருதப்படுகிறது.
ரியல் எஸ்டேட் தொழிலில் மும்பையில்தான் வீடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இங்கு முக்கிய பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 700 வரை விலை போகிறது. ஆனால் டெல்லி அருகே தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள குர்கானில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை மும்பையை மிஞ்சிவிட்டன.
இங்கு கட்டப்பட்ட டிஎல்எப் கேமிலியாஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு வீடு ரூ.190 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்போ-எக்ஸ் மென்பொருள் நிறுவனம் அதன் இயக்குநர் ரிஷி பாரதி மூலமாக, டிஎல்எப் கேமிலியாஸ் குடியிருப்பில் 16,290 சதுர அடி கொண்ட வீட்டை ரூ.190 கோடிக்கு வாங்கியுள்ளது. இங்கு கார்பட் ஏரியா அடிப்படையில் ஒரு சதுர அடி 1.82 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதற்கான முத்திரைதாள் கட்டணமாக கடந்த 2-ம் தேதி ரூ.13 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
மும்பை லோதா மலபார் பகுதியில் கடந்தாண்டு ஒரு நிறுவனம் 3 வீடுகளை ரூ.263 கோடிக்கு வாங்கியது. அப்போது சதுர அடி ரூ.1.36 கோடிக்கு விற்கப்பட்டது. தற்போது குர்கானில் ஒரு சதுர அடி ரூ.1.82 லட்சத்துக்கு விற்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.