மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்து உள்ளது.
கடந்த 2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்தார்.
கடந்த 2021 அக்டோபரில் அஜித் பவார், அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலைகள், இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், “ஆலைகள், சொத்துகள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி நடைமுறைகள் மூலமே நடைபெற்று உள்ளன. பினாமி முறையில் பண பரிவர்த்தனை நடைபெறவில்லை. எனவே ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த நவம்பர் 5-ம் தேதி வருமான வரித் துறை சார்பில் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்து உள்ளது.
இதன்படி மகாராஷ்டிராவின் ஜரந்தேஷ்வரில் உள்ள ரூ.400 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை, தெற்கு டெல்லியில் உள்ள ரூ.20 கோடி மதிப்பிலான வீடு, கோவாவில் உள்ள ரூ.250 கோடி மதிப்பிலான தங்கும் விடுதி உள்ளிட்ட சொத்துகளை வருமான வரித் துறை வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறது.
தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். அவர் கூறும்போது, “ இது தீர்ப்பாயத்தின் உத்தரவு. நீண்ட கால விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நான் நிரபராதி என்பது தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நான் பாஜகவில் இணைந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கூறுவது தவறான கண்ணோட்டம்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் கூறும்போது, “இதர கட்சிகளில் இருந்து பாஜகவில் சேரும் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவது வழக்கமானது. எங்கள் கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு அஜித் பவார் மாறினார். தற்போது அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு, சொத்துகள் விடுவிக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.