புதுடெல்லி: கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் 28 நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் 28 புதிய நவோதயா பள்ளிகள் ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை பகுதிகளில் இவை ஏற்படுத்தப்படும். இந்த முயற்சியானது, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு உயர்தர கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
கிட்டத்தட்ட அனைத்து கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா பள்ளிகளும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்க்கப்படுவதால் அவற்றில் உள்கட்டமைப்பு வசதிகளும் கல்வித் தரமும் மேம்படும். புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் மூலம் சுமார் 82,560 மாணவர்கள் பலன் அடைவார்கள். மேலும் இவற்றுக்காக புதிதாக 5,388 பணியிடங்கள் உருவாகும். இதுபோல் புதிய நவோதயா பள்ளிகள் மூலம் 15,680 கிராமப்புற மாணவர்கள் பலன் அடைவார்கள். 1,316 புதிய பணியிடங்கள் உருவாகும்.
தற்போது மொத்தம் 1,256 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 வெளிநாடுகளில் உள்ளன. இவற்றின் மூலம் 13.56 லட்டத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் அடைந்து வருகின்றனர். புதிய 85 கேந்திரிய வித்யாலயாக்களில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 9-ம் இதையடுத்து ஆந்திரா மற்றும் ஒடிசாவில் தலா 8-ம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.