புதுடெல்லி: “இந்தியாவின் மக்கள் தொகையில் இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, கவலையளிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது” என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த மருத்துவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் மக்கள் தொகையில் இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த விஷயம் கவலையளிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது. அவ்வப்போது இது குறித்து மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். ராணுவத்தில் உள்ள சுகாதார சவால்களுக்கு மத்தியில், ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்வது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும்.
உலக அளவிலும் இந்தியாவிலும் இருதய நோய்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இதுபோன்ற நோய்கள் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக நகர்ப்புறங்களில், மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. 2014-ஆம் ஆண்டில் இருந்து சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, ஆயுஷ்மான் பாரத், பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா, தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை ஆரோக்கியமான நாடாக மாற்ற அரசு தன்னால் இயன்றதைச் செய்ய உறுதி பூண்டுள்ளது.
2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய அரசு ரூ.6.2 லட்சம் கோடிகளை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இது திறன் மேம்பாடு, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.