செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் புஷ்பராஜுடன் (அல்லு அர்ஜுன்). ஈகோ மோதலில் ஈடுபடுகிறார். ஐபிஎஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்), அவருடைய ராஜ்ஜியத்தை அழிக்கவும் முயல்கிறார். இன்னொருபுறம் தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுக்கும் முதல்வர் நரசிம்ம ரெட்டியை (ஆடுகளம் நரேன்) தூக்கி விட்டு, தனக்கு வேண்டிய பூமிரெட்டி சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) முதல்வராக்குகிறார் புஷ்பராஜ்.
இடையில் தன்னை ஒதுக்கி வைக்கும் தன் தந்தையின் மூத்த தாரத்து குடும்பத்துக்கு ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்கிறார். இறுதியில் புஷ்பராஜ் – ஃபஹத் ஃபாசில் மோதல் என்ன ஆனது? பகையான குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா? என்பது கதை.
‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்திலிருந்தே கதைத் தொடங்குகிறது. அதிலிருந்த மூலக் கதையில் சிறிது ‘பட்டி டிங்கரிங்’ பார்த்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். சுமார் 3.20 மணிநேரம் ஓடும் படத்தை தொய்வில்லாமல் படமாக்கியதற்காக அவரைப் பாராட்டலாம். முதல் பாகத்தின் மெகா வெற்றியைக் கருத்தில் கொண்டு இதன் மேக்கிங்கிலும் குறை வைக்கவில்லை.
முதல் பாகத்தில் கடத்தல் தொழிலில் கூலியாகவும் புத்திசாலித்தனத்தால் வளரும் நாயகனாகவும் காட்டப்பட்டிருந்த அல்லு அர்ஜூனை, இதில் டானாக மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.முதல்வருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போக, தன்னுடன் புகைப்படம் எடுக்கும் அரசியல்வாதியை முதல்வராக்கும் அளவுக்கு அவரின் பாத்திர படைப்பு இருக்கிறது. அதே நேரம் அவருக்கும் ஃபஹத் ஃபாசிலுக்கும் இடையேயான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ ஆட்டம் ரசிக்கும்படி உள்ளது.
சென்டிமென்ட், மனைவி ஸ்ரீவள்ளியுடன் (ராஷ்மிகா மந்தனா) ரொமான்ஸ், எதிராளிகளை துவம்சம் செய்வது என மாஸ் படத்துக்குத் தேவையானவற்றைக் கலந்து கொடுக்க மறக்கவில்லை. ஆனால், வேகமாக நகரும் முதல் பாதிக்கு ஸ்பீடு பிரேக் போடுகிறது இரண்டாம் பாதி. மையக் கதையிலிருந்து விலகி எங்கெங்கோ காட்சிகள் நகரத் தொடங்கிவிடுகின்றன. முதல் பாதியில் பார்த்த காட்சிகளே மீண்டும் வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
சில காட்சிகளைத் தேவையே இல்லாமல் நீளமாகப் படமாக்கி இருக்கிறார்கள். இவை எல்லாமே பார்வையாளர்களை நெளிய செய்கின்றன. ஏகப்பட்ட பூச்சுற்றல்களும், லாஜிக் மீறல்களும் படம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. நாயகனாக அல்லு அர்ஜுன், தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஒரு தோளைத் தூக்கி நடப்பது, வெற்றிலையை மெல்லுவது, பார்வையிலேயே பேசுவது என அவருடைய உடல்மொழியும் கச்சிதம். புடவைக்கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டத்திலும், சண்டைக் காட்சியிலும் மிரட்டுகிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனாவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபஹத் ஃபாசிலும் நன்றாக நடித்திருக்கிறார். வில்லனாக ஜெகபதிபாபு, ராவ் ரமேஷ், ‘ஆடுகளம்’ நரேன், சுனில் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. சாம் சி.எஸ்.சும் பின்னணி இசையில் உதவியிருக்கிறார்.
மிர்ஸ்லாவ் குபா ப்ரோசெக்கின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. நீளமான காட்சிகளில் படத்தொகுப்பாளர் நவீன் நூலி கத்திரி போட மறந்துவிட்டார். கதையில் ‘புஷ்பா ’னா ‘ஃபிளவர்’னு நினைச்சியா?, ‘ஃபயர்’, ‘வைல்ட் ஃபயர்’ என்று மாஸ் வசனம் வரும். ஆனால் அந்த இரண்டுமே படத்தில் இல்லை!