அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று (டிச.6) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 44.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. இந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ்குமார் ரெட்டி 42 ரன்களையும், கே.எல்.ராகுல் 37 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி களமிறங்கினர். பும்ரா வீசிய 11-வது ஓவரில் உஸ்மான் கவாஜா 13 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் – நாதனுடன் கைகோத்தார். இருவரும் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் நிதானத்துடன் ஆடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 33 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்த ஆஸ்திரேலிய அணி 86 ரன்களைச் சேர்த்துள்ளது. நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், லபுஷேன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.