கடந்த நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆனால் புதிய அரசு பதவியேற்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னணி காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் பாஜக மட்டும் 132, ஷிண்டேவின் சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஷிண்டேவின் சிவசேனா கட்சி சார்பில் பாஜக மூத்த தலைவர்கள் 13 பேர் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளனர். பாஜக தலைமை கண் அசைத்தால், 13 பேரும் பாஜகவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பார்கள்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 132, ஷிண்டே அணியில் உள்ள 13 பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் என பாஜகவுக்கு தனித்து 145 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் பாஜகவால் தனித்தே ஆட்சி அமைக்க முடியும். எனினும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல பாஜக தலைமை திட்டமிட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக தலைமையும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தீர்மானித்துவிட்டன. இது அப்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தெரியும். இதன்காரணமாகவே தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஷிண்டே டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஷிண்டேவை நியமிக்க அமித் ஷா உறுதி அளித்தார். இதை ஏற்காத ஷிண்டே முதல்வர் பதவி வழங்க கோரினார். ஆனால் அமித் ஷாவும் பாஜக தலைமையும் ஷிண்டேவின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தனர். இந்த சூழலில் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஏக்நாத் ஷிண்டே கடந்த 10 நாட்களாக சில நாடகங்களை நடத்தினார். இதை பாஜக தலைமை கண்டுகொள்ளவில்லை.
பதவியேற்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு வரை ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்பாரா என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் பாஜக தலைமையின் வேண்டுகோளை ஏற்று அவர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.