ஷம்பு: டெல்லி செல்லும் போராட்டத்தை தொடங்கிய விவசாய சங்க தலைவர்களிடம், ஷம்பு எல்லையில் பஞ்சாப் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ‘ஜோடி’ பேரணியை தொடங்க பஞ்சாப் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் – ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையைில் வியாழக்கிழமை குவிந்தனர்.
ஷம்பு எல்லையில் இருந்து இவர்கள் நடைபயணமாக டெல்லி நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஷம்பு எல்லையில் விவசாய சங்க தலைவர்களுடன் பஞ்சாப் காவல் துறை டிஐஜி மந்தீப் சிங் சித்து தலைமையில் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பேட்டியளித்த டிஐஜி மந்தீப் சிங் சித்து, “டெல்லி நோக்கி அமைதியாக நடை பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை எனவும் விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லும் பேரணியை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். டெல்லி போலீஸாரிடம் அனுமதி பெற்று பேரணி செல்லுமாறு, விவசாய சங்க தலைவர்களிடம் ஹரியானாவின் அம்பாலா நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல்லி நோக்கி ‘ஜோடி’ பேரணி அணிவகுப்பு: இதனிடையே, 101 விவசாயிகள் ஜோடியாக ஷம்பு பகுதியில் இருந்து டெல்லி நோக்கி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு தங்களின் ஜோடி பேரணி அணிவகுப்பை தொடங்குவார்கள் என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஜோடி பேரணி டெல்லியை நோக்கி அணிவகுக்கும். அரசால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கும் நேரம் இது. டெல்லி நோக்கிய எங்களின் பேரணி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு டெல்லி நோக்கி கிளம்பும். எங்கள் பேரணியை அரசு தடுத்து நிறுத்தினால் அது எங்களுக்கு தார்மிக வெற்றிதான். ஏனென்றால் விவசாயிகள் டிராக்டர்களில் வரவில்லை என்றால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.
இது பஞ்சாப் ஹரியானா எல்லை போல் தெரியவில்லை. மாறாக, சர்வதேச எல்லை போலத் தெரிகிறது. அவர்களுக்கு வாய்ப்பு இருந்தால் அவர்கள் பறவையைக் கூட எல்லை வழியாக அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.
இதனிடையே, விவசாயிகளின் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து ஹரியானாவின் ஆம்லா போலீஸார் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆம்லா மாவட்ட எஸ்.பி. உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது. ஹரியானா எல்லைப் பகுதியில் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தங்களின் பேரணி குறித்து மறுபரிசீலனை செய்யுமாறும், டெல்லி போலீஸாரிடமிருந்து அனுமதி பெற்ற பின்பு தங்களின் நடவடிக்கைகளை திட்டமிடும்படியும் விவசாயிகளிடம் ஆம்லா போலீஸார் புதன்கிழமை தெரிவித்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 163 தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.