புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார்.
அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பூடான் மன்னரின் வருகை குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், “இன்று புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். அவரது வருகை இரு நாடுகளுக்கு இடையேயான தனித்துவமான நட்பை மேலும் வலுப்படுத்தும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு அண்டை நாடுகளுக்கு இடையே ஆழமான வேரூன்றிய உறவுகளையும் பரஸ்பர மரியாதையையும் குறிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூடான் மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் பூடான் மன்னரை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்புகள், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் பூடானும் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலான அசாதாரணமான மற்றும் முன்மாதிரியான உறவைக் கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூடான் மன்னரின் வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.