சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் இயங்கும் தனியார் மெட்ரிக் பள்ளியில் அனுமதியின்றி மாணவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில், அந்தப் பள்ளியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உடல்ரீதியாக எந்தளவுக்கு திறனுடன் உள்ளனர் என்பதை அறிவதற்காக தாங்கும் திறன் (endurance testing) பரிசோதனை கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னை ஐஐடி மூலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பெற்றோர்களின் அனுமதி பெறாமல் மாணவர்களுக்கு மனரீதியான தாங்கும் திறன் பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு புகார் பெறப்பட்டது. அந்தப் புகாரில் பெற்றோர் தரப்பில், மாணவர்கள் மீது மருத்துவப் பரிசோதனை செய்யும் போது ஐசிஎம்ஆர் (ICMR) வழிகாட்டுதலின்படி பெற்றோரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், அவ்வாறு பெறாமல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகார் குறித்து பள்ளி வளாகத்தில் கடந்த நவம்பர் 15-ம் தேதி பெற்றோர் கூட்டம் நடத்தி அதில் பரிசோதனை சம்பவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மறுபுறம், இந்தப் புகார் வெளியே வந்ததை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பிலும் தற்போது விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க பள்ளி நிர்வாகத்தையும், புகார் தெரிவித்த பெற்றோர்களையும் நாளை (டிசம்பர் 6) நேரில் வர தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பெற்றோர்கள் காலையிலும், பள்ளி நிர்வாகம் மதியமும் நேரில் கலந்து கொண்டு தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க உள்ளன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் எம்.சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஐடி அறிக்கையின் விவரம்: முன்னதாக, இந்த சர்ச்சை தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்களின் ஷூக்களில் ஸ்மார்ட் இன்ஸோல்கள் பொருத்தப்பட்டு அவர்கள் அதனை அணிந்து 10 நிமிடங்கள் வரை நடக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த் ஸ்மார்ட் இன்ஸோல் நேரடியாக உடலில் தொடர்பில் இல்லை. ஆனால் அத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் மூலம் தரவுகளை சேகரித்துள்ளனர். இந்த பரிசோதனை என்பது எவ்விதத்திலும் மருத்துவப் பரிசோதனை இல்லை. அதனால், இதற்கு பெற்றோர் முன் அனுமதி பெறத் தேவையில்லை.
இந்தப் பரிசோதனை தாங்கும் திறன் சார்ந்தது. இதில் மாணவர்களுக்கு மாத்திரை போன்றோ மருந்து போன்றோ எவ்வித பொருளும் உட்கொள்ள அழிக்கப்படவில்லை, உடலில் செலுத்தப்படவும் இல்லை. அதனால் இது மருத்துவப் பரிசோதனை ஆகாது. இருப்பினும், பெற்றோரின் புகாரை கருத்தில் கொண்டு பள்ளியின் முதல்வர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், பள்ளியின் நிர்வாகத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பரிசோதனைகளுக்கு பெற்றோர்களிடம் முன்கூட்டியே சம்மதம் பெற்றே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.