ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று (டிச.5) வெளியானது.
தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்கின. மேலும், புக் மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றது.
இப்படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழகத்தைத் தவிர பரவலாக பல மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை ப்ரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் ரேவதிக்கு வயது 39 எனத் தெரிகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய அப்பெண்ணை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகத் தெரிகிறது. ஹைதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் 9.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.