திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி நேற்று தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, பிடாரி அம்மன், விநாயகர் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் நேற்று காலை நடைபெற்றது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தீபத் திருவிழாவின் 10 நாள் உற்சவம் தொடங்கியது. 6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார் வீதியுலா, வெள்ளித் தேரோட்டம் நடைபெறும்.மகா தேரோட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று ஒரே நாளில் 5 தேர்களில் சுவாமிகள் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்ததும், அடுத்த தேர் புறப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக. கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் காணலாம். கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் வரும் 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.